தர்மபுரி
முருங்கைக்காய் ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.15 குறைந்தது
|தர்மபுரி மாவட்டத்தில் வரத்து அதிகரிப்பு காரணமாக முருங்கைக்காய் விலை ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.15 குறைந்தது. உழவர் சந்தையில் நேற்று 1 கிலோ ரூ.30- க்கு விற்பனையானது.
தர்மபுரி மாவட்டத்தில் வரத்து அதிகரிப்பு காரணமாக முருங்கைக்காய் விலை ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.15 குறைந்தது. உழவர் சந்தையில் நேற்று 1 கிலோ ரூ.30- க்கு விற்பனையானது.
வரத்து அதிகரிப்பு
அதிக அளவில் விற்பனையாகும் முக்கிய காய்கறிகளில் ஒன்றான முருங்கைக்காய். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்த தண்ணீர் தேவை கொண்ட முருங்கை காய் விளைச்சல் ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் நடக்கிறது.
சாம்பார், குழம்பு, கூட்டு ஆகியவற்றில் முருங்கைக்காயை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். உணவின் சுவையைக் கூட்டும் அதிக நார்சத்து கொண்ட முருங்கைக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை அதிக அளவில் உள்ளன.
விலை அதிகரிப்பு
மருத்துவ குணம் கொண்ட முருங்கைக்காய் அதிக சத்துக்கள் கொண்டதாக இருப்பதால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் இருப்பவர்கள் முருங்கைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. முருங்கைக்காய் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக அதன் விலை கணிசமாக குறைந்தது.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக உழவர் சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.45 க்கு விற்பனையானது. இந்த நிலையில் முருங்கைக்காய் வரத்து அதிகரிப்பால் அதன் தேவை குறைந்ததால் நேற்று ஒரே நாளில் முருங்கைக்காய் விலை ஒரு கிலோவிற்கு ரூ.15 குறைந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ ரூ.30-க்கும், வெளிமார்க்கெட்டில் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. முருங்கைக்காய் விலை கணிசமாக குறைந்ததால் அதன் விற்பனை வழக்கத்தை விட அதிகரித்தது.