தேனி
முருங்கைக்காய் கிலோ ரூ.70-க்கு விற்பனை
|ஆண்டிப்பட்டி பகுதியில் முருங்கைக்காய் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முருங்கைக்காய் விவசாயம்
மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ள தேனி மாவட்டத்தில் முருங்கைக்காய் அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் முருங்கைக்காய்கள் தரத்திலும், ருசியிலும் தரமாக இருப்பதால் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் ஆண்டிப்பட்டி முருங்கைக்காய்களுக்கு எப்போதும் மவுசு இருக்கும். இதன் காரணமாக வியாபாரிகள் ஆண்டிப்பட்டி பகுதிக்கு நேரில் வந்து முகாமிட்டு முருங்கைக்காய்களை வாங்கி செல்கின்றனர்.
ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திம்மரசநாயக்கனூர், ஆத்தங்கரைப்பட்டி, கடமலைக்குண்டு, கண்டமனூர், பாலூத்து உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முருங்கைக்காய் விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது.
விலை உயர்வு
ஆண்டிப்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, கொம்புக்காரன்புலியூர் பகுதிகளில் இருந்து மட்டும் ஒரு நாளைக்கு 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் முருங்கைக்காய்கள் டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு முருங்கைக்காய்கள் விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ முருங்கை ரூ.3-க்கு கூட வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. விலை வீழ்ச்சியால் முருங்கைக்காய்களை, விவசாயிகள் பறிக்காமல் மரத்தில் அப்படியே விட்டனர்.
இந்நிலையில் 15 நாட்களில் முருங்கைக்காய் விலை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது. தற்போது ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விலை உயர்ந்து உள்ளது. இதன்காரணமாக பெரும் நஷ்டத்தை சந்தித்து இருப்பதாக கூறி வந்த முருங்கை விவசாயிகள் தற்போது பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மொத்த வியாபாரிகள் நேரடியாக வந்து முருங்கைக்காய்களை விவசாயிகளிடம் வாங்கி செல்கின்றனர். மேலும் வருகிற தை மாதம் வரையில் முருங்கைக்காய்களின் விலை ஏறுமுகத்தில் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.