< Back
மாநில செய்திகள்
கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கைக்காய்கள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கைக்காய்கள்

தினத்தந்தி
|
30 Aug 2023 11:30 PM GMT

வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்ததால், கால்நடைகளுக்கு முருங்கைக்காய்கள் தீவனமாகி வருகிறது.

முருங்கை சாகுபடி

ஒட்டன்சத்திரம், இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் முருங்கைக்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு விளையும் முருங்கை காய்கள் ஒட்டன்சத்திரம், மார்க்கம்பட்டி மார்க்கெட்டுகளில் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் முருங்கைக்காய்கள் செல்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருங்கைக்காய்கள் வரத்து குறைந்தது. இதனால் விலை ஏறுமுகமாக இருந்தது. கிலோ ரூ.100 வரை விற்பனையானது.

கிலோ ரூ.6-க்கு விற்பனை

இந்தநிலையில் தற்போது மார்க்கெட்டுகளுக்கு முருங்கைக்காய்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.6 முதல் ரூ.7 வரை விற்பனையாகிறது.

பறிப்பு கூலி, மார்க்கெட்டு கொண்டு செல்ல வாகன போக்குவரத்து செலவு கூட விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. இதனால் முருங்கைக்காய் சாகுபடி செய்த விவசாயிகள் பொருளாதார ரீதியாக முடங்கி போய் விட்டனர்.

மரங்களில் காய்களை பறிக்காமலயே அப்படியே சில விவசாயிகள் விட்டு விட்டனர். இதனால் இடையக்கோட்டை பகுதியில் உள்ள மரங்களில் முருங்கைக்காய்கள் காய்ந்து தொங்கி கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

கால்நடைகளுக்கு தீவனம்

விலை வீழ்ச்சியால் வேதனை அடைந்த சில விவசாயிகள், தங்களது வீடுகளில் வளர்க்கிற ஆடு, மாடுகளுக்கு முருங்கைக்காய்களை தீவனமாக்கி விட்டனர். தோட்டங்களில் இருந்து கட்டுக்கட்டாக முருங்கைக்காய்களை பறித்து வந்து கால்நடைகளுக்கு கொடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து கப்பல்பட்டியை சேர்ந்த விவசாயி செல்வப்பிரகாஷ் கூறுகையில், எங்கள் பகுதியில் விளைகிற முருங்கைக்காய்கள் மிகவும் சுவை உள்ளதாக இருக்கும். இதனால் மார்க்கெட்டில் இந்த முருங்கைக்காய்க்கு தனி மவுசு உள்ளது. தற்போது ஏற்பட்ட விலை வீழ்ச்சி விவசாயிகளை நிலைகுலைய செய்து விட்டது. எனவே முருங்கைக்காய்களுக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும். முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும் என்றார்.

Related Tags :
மேலும் செய்திகள்