மதுரை
மழையால் முருங்கைக்காய் விலை உயர்வு- மதுரையில் கிலோ ரூ.60-க்கு விற்பனை
|மழையால் முருங்கைக்காய் விலை உயர்ந்து மதுரையில் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு சீசனை பொறுத்து தினமும் 15 டன் முதல் 20 டன் வரை முருங்கைக்காய்கள் விற்பனைக்காக வருகின்றன. குறிப்பாக திருச்செந்தூர், உடன்குடி, திசையன்விளை, விளாத்திகுளம், ஒட்டன்சத்திரம், ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி போன்ற இடங்களில் இருந்தும், குஜராத், மராட்டியம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ெகாண்டு வரப்படுகின்றன.
சீசன் இல்லாத காலத்தில், ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.400 வரை செல்லும். வரத்து அதிகமாக இருப்பதால் கடந்த சில வாரங்களாக முருங்கைக்காய் விலை மிகவும் குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் தற்போது விலை உயர்ந்து வருகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.60-க்கு விற்பனையானது. அதற்கு முன்பு ஒரு கிலோ ரூ.30, 40 என இருந்தது. தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது. மழை பெய்தால் முருங்கைக்காய் விளைச்சல் பாதிக்கப்படும். தற்போது தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்வதால், முருங்கைக்காய் விலை அதிகரித்து வருகிறது.
ஆனால், மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் மற்ற காய்கறிகளின் விலையும் குறைவாகவே இருக்கிறது. அதாவது, தக்காளி ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனையானது. கத்தரிக்காய் ரூ.50, வெண்டைக்காய் ரூ.30, மிளகாய் ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.80, பெரிய வெங்காயம் ரூ.30, புதிய இஞ்சி ரூ.100, பழைய இஞ்சி ரூ.300, கேரட் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.30, சிறிய பாகற்காய் ரூ.120 என விற்பனையானது.
இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.