போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: ரம்ஜானுக்கு பிறகு ஆஜராவதாக அமீர் கடிதம்?
|போதைப்பொருள் கடத்தல் விவகாரம் குறித்த விசாரணைக்கு நாளை ஆஜராக கோரி, இயக்குனர் அமீருக்கு டெல்லி போலீசார் சம்மன் அனுப்பினர்.
சென்னை,
உணவு பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தி ரூ.2 ஆயிரம் கோடி வரை சம்பாதித்த விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.
இதற்கு மூளையாக செயல்பட்ட சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். ஜாபர் சாதிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது.
இதில் முதல் கட்டமாக போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான அமீருக்கு டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நாளை (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் உள்ள தங்கள் அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பினர். இதேபோல், ஜாபர் சாதிக்கின் தொழில் பங்குதாரர்களான அப்துல் பாசித் புகாரி, சையத் இப்ராஹிம் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நாளை ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இயக்குனர் அமீர் மற்றும் பங்குதாரர்களான அப்துல் பாசித் புகாரி, சையத் இப்ராஹிம் ஆகியோர் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு மெயில் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில், அப்துல் பாசித் புகாரி வெளிநாட்டில் இருப்பதாலும், இயக்குனர் அமீர் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட இருப்பதால் 11-ம் தேதிக்கு பிறகு தங்களை விசாரணைக்கு அழைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.