< Back
மாநில செய்திகள்
போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் சகோதரரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

கோப்புப்படம்

மாநில செய்திகள்

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் சகோதரரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

தினத்தந்தி
|
21 May 2024 11:33 PM IST

ஜாபர் சாதிக்கின் மனைவியை தொடர்ந்து அவரது சகோதரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சென்னை,

வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்கள் கடத்திய வழக்கில் சென்னையை சேர்ந்த சினிமா பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். விசாரணையில் அவர் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் அவர், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் களம் இறங்கினார்கள். டெல்லி திகார் சிறைக்கு சென்று அவரிடம் அதிரடி விசாரணையும் நடத்தினார்கள். சென்னை சாந்தோமில் உள்ள அவரது வீடு, பெருங்குடியில் உள்ள குடோனிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கின் நண்பரான திரைப்பட இயக்குனர் அமீரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அவருடைய வீடு, அலுவலகமும் சோதனையிடப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கின் மனைவி ஹமீனாவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தார்கள். அதன்படி அவர் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினார். அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை விவரம் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

அவரிடம் விசாரணை முடிந்த கையோடு ஜாபர் சாதிக்கின் சகோதரர் சலீமுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவசர சம்மன் அனுப்பினார்கள். அதன்படி அவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காலை 11 மணியளவில் ஆஜரானார். விசாரணை முடிவடைந்து மதியம் 2.15 மணியளவில் அவர் புறப்பட்டு சென்றார்.

பின்னர், மீண்டும் மதியம் 3.10 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினார். அவரிடம் இரவு வரை விசாரணை நீடித்தது. இந்த விசாரணையில் ஜாபர் சாதிக் பற்றியும், அவரது செயல்பாடுகள் குறித்தும் அடுக்கடுக்கான கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் சலீமிடம் கேட்டு பதிலை பெற்றனர். இந்த விசாரணை விவரம் அனைத்தும் 'வீடியோ' பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்