போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி
|ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
சென்னை,
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் ஆஜர்படுத்தியது. அப்போது 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிபதி அல்லி அனுமதி அளித்தார்.
3 நாள் அனுமதி இன்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் இன்று ஜாபர் சாதிக் மீண்டும் நீதிபதி அல்லி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை சார்பில், ஜாபர் சாதிக்கிடம் முழுமையாக விசாரணை முடியவில்லை. இதனால் விசாரணை நடத்த மேலும் 12 நாள் அனுமதி அளிக்க வேண்டும் என கேட்கப்பட்டது.
இதையடுத்து மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். அத்துடன் ஜூலை 23-ந்தேதி மாலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.