தூத்துக்குடி
முக்காணி தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
|முக்காணி தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்து போனார்.
ஆறுமுகநேரி:
முக்காணி தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
பள்ளி மாணவன்
தூத்துக்குடி மாவட்டம் முக்காணி தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வசித்து வருபவர் அப்துல் சமது. இவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு முகமது உமர் (வயது 12) உள்பட 2 மகன்கள் உண்டு.
இதில் முகமது உமர் ஆத்தூர் ஆற்றங்கரை ஓரம் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் முகமது உமர் நண்பர்களுடன் முக்காணி தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றான். ஆற்றின் பாலத்திற்கு கீழ்புறம் உள்ள பகுதியில் நண்பர்களோடு குளித்துக் கொண்டு இருந்த அவனுக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது.
தண்ணீரில் மூழ்கினான்
அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றான். அங்கிருந்து நீச்சல் அடித்து வெளியே வரமுடியாமல் தண்ணீரில் தத்தளித்தான். சிறிது நேரத்தில் அவன் தண்ணீரில் மூழ்கினான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் கூச்சலிட்டனர். இதை கேட்டு அக்கம்பக்கத்தினரும், அவரது தந்தையும் ஆற்றுக்குள் குதித்து தேடினர்.
சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு தண்ணீருக்கு அடியில் மயங்கிய நிலையில் கிடந்த தனது மகனை அப்துல்சமது தூக்கிக் கொண்டு கரைக்கு வந்தார்.
உடனடியாக அவனை ஆத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், முகமது உமர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
தகவல் அறிந்ததும் ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் சம்பவ இடத்திற்கு ெசன்றார். சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த பள்ளி மாணவன் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.