கன்னியாகுமரி
அருமனை அருகே சிற்றார் அணையில் மூழ்கிய கேரள பட்டதாரி வாலிபர் பிணமாக மீட்பு
|அருமனை அருகே சிற்றார் அணையில் மூழ்கிய கேரள பட்டதாரி வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.
அருமனை:
அருமனை அருகே சிற்றார் அணையில் மூழ்கிய கேரள பட்டதாரி வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.
கேரள பட்டதாரி
குமரி-கேரள எல்லை பகுதியான வெள்ளறடையை அடுத்த மணக்காலையை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய ஒரே மகன் பிரதீப் (வயது 26). பட்டதாரியான இவர் கேரள அரசு பணிக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பணிக்காக காத்து இருந்தார். தற்போது பெயிண்டராக வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் பிரதீப் தனது நண்பர்கள் 3 பேருடன் அருமனை அருகே உள்ள சிற்றார்-2 அணைக்கு சுற்றுலா வந்தார். அங்கு வைகுண்டம் என்ற இடத்தில் குளிப்பதற்கு நீர்த்தேக்கத்தில் நண்பர்களுடன் இறங்கினார். அவர்கள் நீச்சலடித்து குளித்து கொண்டு இருந்தனர். அப்போது பிரதீப் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி மாயமானார்.
பிணம் மீட்பு
இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் பிரதீப்பை தேடினார்கள். அதைத்தொடர்ந்து கடையால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் குலசேகரம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்களுடன் பொதுமக்களும் இணைந்து பிரதீப்பை அணையில் தேடினார்கள். ஆனால் பிரதீப்பை கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் பிரதீப் பிணம் கரை ஒதுங்கியது. உடலை போலீசார் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி கடையால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.