< Back
மாநில செய்திகள்
குப்பை எரிஉலை திட்டத்தை  கைவிட சௌமியா அன்புமணி கோரிக்கை
சென்னை
மாநில செய்திகள்

குப்பை எரிஉலை திட்டத்தை கைவிட சௌமியா அன்புமணி கோரிக்கை

தினத்தந்தி
|
8 Sept 2023 1:58 PM IST

சென்னையில் குப்பை எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி கோரிக்கை விடுத்தார்.

சந்திப்பு

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் நேற்று கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனை, பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி சந்தித்தார். அப்போது, சென்னையில் காற்று மாசை கட்டுப்படுத்தி தூய காற்று செயல்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். குப்பை எரிஉலை திட்டங்களை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கை மனுவை அளித்தார்.

இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் சவுமியா அன்புமணி கூறியதாவது:-

தீர்மானம்

சென்னையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட ஆபத்தான குப்பைகளை எரிப்பதற்காக ரூ.5 ஆயிரம் கோடி செலவில் குப்பை எரிஉலைகள் அமைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் காற்று மாசு ஏற்படும். இது மிகப்பெரிய சுகாதார சீர்கேடாக அமையும். சென்னை மக்களுக்கு சுவாச பிரச்சினைகள் ஏற்படும். எனவே, இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது.

இதேபோல, சென்னையில் 10 இடங்களில் பன்னடுக்கு கார் நிறுத்தங்கள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 7 சதவீதம் பேர் தான் கார் பயன்படுத்துகிறார்கள். 56 சதவீதம் பேர் பொது போக்குவரத்தையும், நடைபாதையையும் பயன்படுத்துகிறார்கள். எனவே, 56 சதவீதம் பேரின் நலனை கருத்தில் கொண்டு நடைபாதைகளை மேம்படுத்த வேண்டும். சைக்கிள் பாதைகளை தனியாக அமைக்க வேண்டும். பன்னடுக்கு கார் நிறுத்தகங்கள் கட்டும் செலவை பொது போக்குவரத்தை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட பகுதிகளில் தோல்வியையே கண்டுள்ளது.

காற்று மாசு

மேலும், தேசியத் தூய காற்று திட்டத்தின் கீழ் சென்னையில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கான தூய காற்று செயல்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சென்னை மாநகரின் காற்று மாசுபாட்டை குறைப்பதே இதன் நோக்கமாகும். புகை இல்லாத பொதுபோக்குவரத்தை மேம்படுத்த வேண்டும். நல்ல திட்டங்கள் காகித வடிவில் மட்டுமே உள்ளது. இன்னும் செயல்வடிவம் பெறவில்லை. எங்கள் கோரிக்கை தொடர்பாக ஒரு ஆலோசனை கூட்டத்தை கூட்டி அதில் பேசுகிறோம் என கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்