முதல்-அமைச்சர் வருகையையொட்டி ஈரோட்டில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
|முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் 2 நாட்கள் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.
அந்த வகையில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.இ.பிரகாசை ஆதரித்து ஈரோட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான பொதுக்கூட்டம் ஈரோடு அருகே சின்னியம்பாளையத்தில் நாளை நடக்கிறது. இதனை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோட்டுக்கு வருகை தருகிறார்.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி ஈரோட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் இன்றும், நாளையும் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவற்றை பறக்க விட தடை விதித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.