சிவகங்கை
இந்த ஆண்டு விபத்து ஏற்படுத்திய 9 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து -அமைச்சர் எ.வ. வேலு தகவல்
|இந்த ஆண்டு விபத்து ஏற்படுத்திய 9 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
இந்த ஆண்டு விபத்து ஏற்படுத்திய 9 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
ஆய்வு கூட்டம்
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் முன்னிலை வகித்தார்.. நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் எ.வ. வேலு பேசியதாவது:-
தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்காக நான் ஒவ்வொரு மாவட்டமாக சென்று விபத்துகளை தடுப்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறேன். கடந்த 2020-ம் ஆண்டில் 8,600 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்புகள் குறைந்துள்ளன. ஆனால் 2022-ம் ஆண்டு இதுவரை 14 ஆயிரத்து 912 பேர் உயிரிழந்துள்ளனர்.
9 ஆயிரம் பேர்
இந்தியாவில் தினசரி 410 பேர் உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் ஒரு நாளைக்கு 41 பேர் விபத்துகளில் உயிரிழக்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டு 921 விபத்துகளில் 331 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் இந்த ஆண்டு 55 ஆயிரத்து 213 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 9 ஆயிரத்து 243 பேருக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1337 இடங்கள் விபத்துகள் அதிகம் நடைபெறும் ப்ளாக் ஸ்பாட் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் 20 இடங்கள் வருகிறது. இந்த 20 இடங்களிலும் விபத்துகளை தவிர்க்க கலெக்டரின் ஆலோசனைப்படி நெடுஞ்சாலை துறை போக்குவரத்து துறை மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி (மானாமதுரை), மாங்குடி (காரைக்குடி), மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சிவகங்கை நகர சபை தலைவர் துரை ஆனந்த், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணி முத்து, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்கள் பாலமுருகன், ரகுநாதன் மற்றும் வணிகர் சங்கம் பஸ் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.