< Back
மாநில செய்திகள்
ஆண்மைக் குறையை போக்க சித்த மருந்து.. அதன்பின் நடந்த கொடூர கொலை: உடல் உறுப்புகள் விற்பனையா?

அசோக் ராஜன், கேசவமூர்த்தி

மாநில செய்திகள்

ஆண்மைக் குறையை போக்க சித்த மருந்து.. அதன்பின் நடந்த கொடூர கொலை: உடல் உறுப்புகள் விற்பனையா?

தினத்தந்தி
|
21 Nov 2023 6:05 PM IST

கேசவமூர்த்தி கைது செய்யப்பட்ட பின் அவர் கொடுத்த தகவல்படி அசோக் ராஜன் உடலை போலீசார் தோண்டி எடுத்தனர்.

கும்பகோணம்:

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்ராஜன் (வயது 27). சென்னையில் கால்டாக்சி டிரைவராக வேலை செய்து வந்த இவர், நவம்பர் 11ம் தேதி தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் நவம்பர் 13ம் தேதி சென்னைக்கு புறப்பட்டார். ஆனால் அவர் சென்னை சென்று சேரவில்லை.

அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், கடைசியாக சோழபுரம் கிழக்குத் தெருவில் உள்ள சித்த வைத்தியர் கேசவமூர்த்தியின் வீட்டுக்கு அசோக்ராஜன் சென்றது தெரிய வந்தது. பின்னர் கேசவ மூர்த்தியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.

ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு கொண்ட கேசவ மூர்த்தி, அசோக் ராஜனுக்கு போதை மருந்துகள் கொடுத்து ஆசைக்கு இணங்க செய்துள்ளார். அப்போது அவரை கொலை செய்து அவரது வீட்டுக்குள் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் அசோக் ராஜன் உடலை போலீசார் நேற்று முன்தினம் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. சித்த வைத்தியரான கேசவ மூர்த்தி ஆண்மை குறைபாட்டைப் போக்க மருந்து கொடுத்து வந்துள்ளார். இதற்காக அவர் கஞ்சா செடிகள் மற்றும் பலவித மூலிகை இலைகளை கொண்டு பொடி செய்து மாத்திரைகளாக தயாரித்து விற்பனை செய்திருக்கிறார்.

பின்னர் அசோக் ராஜனுக்கு வலை விரித்துள்ளார். சம்பவத்தன்று அவருக்கு சில மருந்துகளை கொடுத்துள்ளார். அது ஆண்மை வீரியத்திற்கான மருந்து என கூறப்படுகிறது. இதை சாப்பிட்ட அசோக் ராஜன், ஒரு கட்டத்தில் உடல் வலி தாங்க முடியாமல் மூச்சடைப்பு ஏற்பட்டு மயங்கினார். இதனால் போலீசில் சிக்கி விடுவோம் என கருதிய கேசவ மூர்த்தி அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி தோலை உரித்து தனியாக புதைத்துள்ளார். விலா எலும்புகளை உடைத்து நொறுக்கி உள்ளார். பின்னர் அந்த உடலை வீட்டின் கழிப்பறை கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் புதைத்திருக்கிறார்.

கேசவமூர்த்தி கைது செய்யப்பட்ட பின் அவர் கொடுத்த தகவல்படி அசோக் ராஜனின் உடலை தோண்டி எடுத்தனர். அப்போது உடலில் சில உள் உறுப்புகளை காணவில்லை. ஆகவே உள் உறுப்புகளை வெட்டி எடுத்து விற்பனை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கேசவமூர்த்திக்கு உடல் உறுப்புகளை திருடி விற்கும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆகவே திருச்சி மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கேசவ மூர்த்தியை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே கேசவ மூர்த்தியின் டைரியில் 194 பெயர்கள் கொண்ட பட்டியல் இருந்துள்ளது. அதில் பெரும்பாலானோர் அரசியல் பிரமுகர்கள், அவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் இளைஞர்கள். எனவே டைரியில் இடம்பெற்று இருப்பவர்கள் கேசவமூர்த்தியிடம் சிகிச்சை பெற்றவர்களா? எதற்காக சிகிச்சை பெற்றார்கள்? அவர்களின் நிலை என்ன? என்பது குறித்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். எனவே போலீஸ் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்