கன்னியாகுமரி
லாரி மோதி டிரைவர் பலி
|களியங்காட்டில் லாரி மோதி டிரைவர் பலி
திங்கள்சந்தை,
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மில்ரோடு திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் முருகையா (வயது69). இவர் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று திசையன்விளையில் இருந்து கல்லூரி பஸ்சில் மாணவர்களை அழைத்து வந்தார். பின்னர் அவர்களை அந்தந்த பகுதிகளில் இறக்கி விட்டு விட்டு இரவு பஸ்சை பார்வதிபுரம் களியங்காட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் ஒதுக்கி நிறுத்தினார்.
பின்னர் இரவு சுமார் 8.10 மணியளவில் சாப்பிடுவதற்காக ஓட்டலை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். களியங்காடு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மருத்துவமனை அருகில் நடந்து சென்றபோது பின்னால் வேகமாக வந்த லாரி முருகையா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் அவருக்கு தலை உள்பட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மதியம் முருகையா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.