தூத்துக்குடி
பீர் பாட்டிலால் தாக்கி டிரைவர் படுகொலை; நண்பர் கைது
|தூத்துக்குடியில் டிரைவர் பீர் பாட்டிலால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகரில் உள்ள ஆ.சண்முகபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் கலைசெல்வன் (வயது 29), லோடு ஆட்டோ டிரைவர். இவரது நண்பர் சதீஷ். இவருக்கு கடந்த 15-ந் தேதி பிறந்தநாள் என்பவதால் அவரிடம் அதே பகுதியை சேர்ந்த மற்ற நண்பர்களான கார் டிரைவர் சந்திரசேகர் (40), ஆனந்தம் மகன் அப்பு (26) ஆகியோர் மதுபானம் வாங்கித் தருமாறு கேட்டு உள்ளனர்.
அப்போது அவர், சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் கிடையாது. இன்னொரு நாள் மதுவாங்கி தருவதாக கூறி உள்ளார். இதனால் சந்திரசேகர், அப்பு ஆகியோர் அங்கிருந்து சென்று விட்டனர்.
அன்று இரவு 10 மணி அளவில் சந்திரசேகர், அப்பு ஆகிய 2 பேரும் கலைசெல்வன் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு கலைசெல்வனும், சதீசும் மது குடித்துக் கொண்டு இருந்தனர். இதனை பார்த்த சந்திரசேகர், எங்களுக்கு மதுபானம் இல்லை என்று கூறிவிட்டு, நீங்கள் மட்டும் மது குடிக்கிறீர்கள். உங்களுக்கு மட்டும் எப்படி கிடைத்தது என்று கேட்டு உள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த சந்திரசேகர், அப்பு ஆகிய 2 பேரும் சேர்ந்து பீர் பாட்டிலால் கலைசெல்வன், சதீ்ஷ் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர்களை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி கலைசெல்வன் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.
இந்த படுகொலை குறித்து தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அய்யப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்தனர். அப்புவை தேடி வருகிறார்கள். மதுபானம் வாங்கி தராததால் ஏற்பட்ட தகராறில் டிரைவர் பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.