அரியலூர்
டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
|டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தா.பழூர்:
டிரைவர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் பழனி. இவரது மகன் சக்திவேல்(வயது 27). டாக்சி டிரைவராக வேலை பார்த்து வந்தார். பழனியும், அவரது மனைவியும் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் படித்து வரும் தங்களது மற்றொரு மகனை பார்க்க சென்றிருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 11-ந் தேதி இரவு சக்திவேலுடன் செல்போனில் பழனி பேசியுள்ளார். அப்போது சக்திவேல் குடிபோதையில் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை, பழனி திட்டி அறிவுரை கூறியுள்ளார். அப்போது சக்திவேல் செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார்.
தற்கொலை
இதையடுத்து பழனி அவருக்கு மீண்டும் போன் செய்தபோது, அவர் போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மறுநாளும் சக்திவேல் போனை எடுக்காததால், சந்தேகமடைந்த பழனி அவரது உறவினரான சேதுராமன் என்பவரை வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அவர் அங்கு சென்று பார்த்தபோது வீட்டில் உள்புறமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு, சக்திவேல் வீட்டில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியது தெரியவந்தது.
இது குறித்து உடனடியாக பழனிக்கு சேதுராமன் தகவல் தெரிவித்தார். மேலும் இது பற்றி தகவல் அறிந்த தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் அங்கு வந்து, சக்திவேலின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதற்கிடையே ஊருக்கு திரும்பிய பழனி, அவரது மனைவி உள்ளிட்டோர் சக்திவேலின் உடலை கண்டு கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.