சென்னை
திருவேற்காட்டில் டிரைவரை அரிவாளால் வெட்டி ஆட்டோ கடத்தல் - ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல்
|திருவேற்காட்டில் ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டி ஆட்டோவை கடத்திச்சென்ற மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து ஆட்டோ சங்க நிர்வாகிகள் சாலை மறியல் செய்தனர்.
பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 32). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு திருவேற்காடு பருத்திபட்டு அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், பாலமுருகன் ஆட்டோ மீது மோட்டார் சைக்கிளுடன் மோதினர்.
இதில் ஆட்டோ சேதம் அடைந்தது. ஆனால் மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்ததாக கூறி பாலமுருகனிடம் மர்மநபர்கள் இருவரும் பணம் கேட்டு மிரட்டினர். பணம் கொடுக்க மறுத்ததால் பாலமுருகனை அவரது ஆட்டோவிலேயே கடத்திச் சென்றனர். சிறிது தூரம் சென்றவுடன் பாலமுருகனை கீழே தள்ளி விட்டு ஆட்டோவை கடத்திச்சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகன், தனது ஆட்டோ சங்க நிர்வாகிகளுடன் சேர்ந்து கடத்தப்பட்ட தனது ஆட்டோவை அந்த பகுதி முழுவதும் தேடினார்.
அப்போது கடத்தப்பட்ட தனது ஆட்டோ ஒரு இடத்தில் இருப்பதை கண்டார். அங்கிருந்த மர்மநபர்களிடம் ஆட்டோவை தரும்படி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் கையில் இருந்த இரும்பு ராடால் பாலமுருகனை தாக்கியதுடன், அரிவாளாலும் சரமாரியாக வெட்டினர்.
மேலும் பாலமுருகனுடன் வந்த சக ஆட்டோ டிரைவரான பிரகாஷ் என்பவருக்கும் வெட்டு விழுந்தது. மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் மர்மநபர்கள் மீண்டும் ஆட்டோவை அங்கிருந்து கடத்திச்சென்று விட்டனர்.இதுகுறித்து திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்கள் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ சங்க நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு திருவேற்காடு பஸ் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஆட்டோ டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அந்த புகாரின் மீது திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.