< Back
மாநில செய்திகள்
தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.35½ லட்சத்துடன் காரில் டிரைவர் தப்பி ஓட்டம் - ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் மடக்கி பிடித்தனர்
சென்னை
மாநில செய்திகள்

தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.35½ லட்சத்துடன் காரில் டிரைவர் தப்பி ஓட்டம் - ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் மடக்கி பிடித்தனர்

தினத்தந்தி
|
8 Jun 2023 1:13 PM IST

அம்பத்தூரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.35½ லட்சம் வசூல் பணத்தை காருடன் டிரைவர் திருடிச்சென்றார். காரில் இருந்த ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் ஊழியர்கள் அவரை மடக்கி பிடித்து பணத்தை மீட்டனர்.

சென்னை அண்ணா நகரில் தனியார் நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் பணம் வசூல் செய்வதும், ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியையும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை காரில் சென்று அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணத்தை வசூல் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். காரில் டிரைவராக கொடுங்கையூரை சேர்ந்த அமீர் பாஷா என்பவர் இருந்தார். அப்போது வசூல் செய்த ரூ.35 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை காரில் வைத்து இருந்தனர்.இதற்கிடையே காரில் இருந்த பணத்துடன் அமீர்பாஷா திடீரென தப்பி சென்றார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனே உதவி மேலாளரிடம் தகவல் தெரிவித்தனர்.

இது தொடர்பாக உதவி மேலாளராக பணிபுரிந்து வரும் சேத்துப்பட்டை சேர்ந்த பரத் என்பவர் அம்பத்தூர் எஸ்டேட் போலீசில் புகார் கொடுத்தார். இந்தநிலையில் வாகனம் செல்லும் இடத்தை கண்காணிக்க உதவும் ஜி.பி.எஸ். கருவி காரில் பொருத்தப்பட்டிருந்ததால், அதனை வைத்து காரில் பணத்துடன் தப்பிச்சென்ற அமீர்பாஷா எங்கு சென்று கொண்டிருக்கிறார் என்பதை நிறுவன ஊழியர்கள் கண்காணித்தனர். அதில் கார் மாதவரம் நோக்கி செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, காரில் பணத்துடன் தப்பி செல்லும் டிரைவர் குறித்து மற்ற ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் விரைந்து சென்று மாதவரம் மண்டல அலுவலகம் முன்பு காரை மடக்கி பிடித்து அமீர்பாஷாவை அம்பத்தூர் எஸ்டேட் போலீசில் ஒப்படைத்தனர். அதில் இருந்த 35½ லட்சத்தையும் மீட்டனர். பிடிபட்ட கார் டிரைவரான கொடுங்கையூரை சேர்ந்த அமீர் பாஷாவை அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் கைது செய்து, கொள்ளை முயற்சியில் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்