< Back
மாநில செய்திகள்
பட்டாபிராமில் வீட்டுக்குள் டிரைவர் மர்ம சாவு
சென்னை
மாநில செய்திகள்

பட்டாபிராமில் வீட்டுக்குள் டிரைவர் மர்ம சாவு

தினத்தந்தி
|
3 Jan 2023 1:57 PM IST

பட்டாபிராமில் வீட்டுக்குள் உடல் அழுகிய நிலையில் டிரைவர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆவடியை அடுத்த பட்டாபிராம் உழைப்பாளர் நகர் 3-வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் விஜயகுமார் (வயது 47), டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக விஜயகுமாரின் மனைவி, கணவரை விட்டு பிரிந்து தனது மகனுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இதனால் விஜயகுமார் மட்டும் இந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக விஜயகுமார், வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. கடைசியாக கடந்த மாதம் 28-ந் தேதி விஜயகுமாரை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். அதன்பிறகு விஜயகுமார் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவரது வீடு பூட்டியே கிடந்தது.

நேற்று காலை விஜயகுமார் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர், விஜயகுமார் தங்கி இருந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது, கதவு உள் தாழ்ப்பாள் போடாமல் லேசாக சாத்தியிருந்தது.

கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு விஜயகுமார் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தரையில் மல்லாந்து படுத்த நிலையில் உடலில் லுங்கி மட்டும் கட்டி இருந்தார். அவரது உடல் முற்றிலும் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த பட்டாபிராம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் விஜயகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகுதான் விஜயகுமாரின் மர்ம சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்