சென்னை
திருவொற்றியூரில் விஷவாயு தாக்கி டிரைவர் சாவு - தண்ணீர் தொட்டியில் விழுந்த செல்போனை எடுக்க முயன்றபோது பரிதாபம்
|திருவொற்றியூரில் தண்ணீர் தொட்டியில் விழுந்த செல்போனை எடுக்க முயன்றபோது விஷவாயு தாக்கி டிரைவர் பலியானார்.
திருவொற்றியூர் தேரடி ஈசானி மூர்த்தி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 50). இவர், ஒப்பந்த அடிப்படையில் சென்னை குடிநீர் வாரியம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று குடிநீர் வினியோகம் செய்வதற்காக திருவொற்றியூர் டி.கே.எஸ். நகர் முதல் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தார். பின்னர் அங்குள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியில்(சம்ப்) தண்ணீரை நிரப்பினார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஜெயக்குமார் சட்டைப்பையில் இருந்த செல்போன் தவறி தரைமட்ட தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயக்குமார், செல்போனை எடுக்க தண்ணீர் தொட்டிக்குள் இறங்கினார்.
பின்னர் தண்ணீருக்குள் விழுந்த செல்போனை தேடிக் கொண்டிருந்தார். திடீரென அவர் தண்ணீரில் மூழ்கினார். சுமார் 20 நிமிடமாக அவர் வெளியே வராததால் அருகில் இருந்த ஒருவர் உள்ளே இறங்கியபோது விஷவாயு தாக்கியதால் வெளியே வந்து விட்டார்.
அப்போது மின்சாரம் தடைபட்டதால் வாளி மூலம் தண்ணீரை வெளியேற்றி விட்டு உள்ளே கிடந்த ஜெயக்குமாரை தூக்கி அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தண்ணீர் தொட்டிக்குள் விஷவாயு தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக தெரிகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சாத்தாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் விரைந்து சென்று பலியான ஜெயக்குமார் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பலியான ஜெயக்குமாரின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் ஆகும். அவருக்கு ஜெயகுமாரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.