< Back
மாநில செய்திகள்
ஆட்டோ குளத்துக்குள் பாய்ந்ததில் டிரைவர் சாவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

ஆட்டோ குளத்துக்குள் பாய்ந்ததில் டிரைவர் சாவு

தினத்தந்தி
|
25 Oct 2023 12:15 AM IST

மார்த்தாண்டம் அருகே சவாரி சென்ற போது டிரைவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் ஆட்டோ அவருடைய கட்டுப்பாட்டை இழந்து குளத்துக்குள் பாய்ந்ததில் அவர் பரிதாபமாக இறந்தார். கல்லூரி மாணவி கீழே குதித்து உயிர் தப்பினார்.

களியக்காவிளை அருகே படந்தாலுமூடு கள்ளிகூட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதாஸ் (வயது 48). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து படந்தாலுமூட்டில் ஓட்டி வந்தார். இவருக்கு சுதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

நேற்று காலையில் ஜெகதாஸ் குழித்துறை ெரயில் நிலையத்தில் சவாரிக்காக நின்று கொண்டிருந்தார்.

அப்போது ஒரு கல்லூரி மாணவியை ரெயில் நிலையத்தில் இருந்து ஏற்றிக் கொண்டு மார்த்தாண்டம் கிறிஸ்டல் தெருவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென ஜெகதாசுக்கு ெநஞ்சுவலி ஏற்பட்டு வலியால் துடித்தார்.

இதனால் ஆட்டோ அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. அந்த சமயத்தில் மாணவியை கீழே குதித்து விடும்படி கூறியுள்ளார். உடனே கல்லூரி மாணவியும் சுதாரித்துக் கொண்டு ஆட்டோவில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார்.

அவர் குதித்த சில நிமிடத்தில் ஆட்ேடா அந்த பகுதியில் உள்ள குளத்துக்குள் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவுடன் ஜெகதாஸ் குளத்துக்குள் மூழ்கினார்.

இதை கண்ட மாணவி சத்தம் போட்டார். அப்போது அருகில் நின்றவர்கள் மற்றும் அந்த வழியாக ஆட்டோவில் வந்த சக டிரைவர்களும் ஓடி வந்து குளத்துக்குள் குதித்து டிரைவர் ஜெகதாசை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அவரை சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ஜெகதாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி மார்த்தாண்டம் போலீசாருக்கும், ஜெகதாசின் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆஸ்பத்திரிக்கு ஓடிவந்த குடும்பத்தினர் ஜெகதாசின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களை உருக்குவதாக இருந்தது.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்