< Back
மாநில செய்திகள்
நகை கடை ஊழியர்களிடம் ரூ.68 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் டிரைவர் கைது
சென்னை
மாநில செய்திகள்

நகை கடை ஊழியர்களிடம் ரூ.68 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் டிரைவர் கைது

தினத்தந்தி
|
24 Dec 2022 4:37 PM IST

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நகை கடை ஊழியர்களிடம் ரூ.68 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் டிரைவர் கைது செய்யப்பட்டார். உறவினரே திட்டமிட்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து கைவரிசை காட்டியது தெரிந்தது.

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 42). இவர் அதே பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். இவரிடம் வேலை செய்யும் ஊழியர்களான அலிகான் (25) மற்றும் சுபானி (25) ஆகியோர் கடந்த 16-ந்் தேதி குண்டூரில் இருந்து ரூ.68 லட்சத்துடன் சென்னை சவுகார்பேட்டையில் நகை வாங்க வந்தனர்.

பஸ்சில் மாதவரம் பஸ் நிலையம் வந்திறங்கிய 2 பேரும் அங்கிருந்து ஆட்டோவில் கொடுங்கையூர் மீனம்பாக்கம் சாலை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்து அவர்களை வழிமறித்த ஒரு கும்பல், வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து அவர்களிடம் இருந்த ரூ.68 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுபற்றி கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின் பேரில் எம்.கே.பி.நகர் போலீஸ் உதவி கமிஷனர் தமிழ்வாணன் தலைமையில் தனிப்படை போலீசார், கொள்ளையர்கள் வந்த கார் பதிவெண்ணை வைத்து ஐதராபாத்தைச் சேர்ந்த கார் டிரைவரான பத்துல வெங்கட நரசிம்மராவ் (31) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அதில் நகை கடை ஊழியர் சுபானியின் உறவினரான ஐதராபாத்தைச் சேர்ந்த சையத் அப்துல் பாஜி என்பவர்தான் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டதும், அவரது திட்டத்தின்படியே கார் ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும், இவரது கூட்டாளிகளான ஆந்திராவை சேர்ந்த மற்றொரு சுபானி, அஞ்சு பாபு, மகேஷ் ஆகியோருடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிந்தது. டிரைவர் பத்துல வெங்கட நரசிம்மராவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.7 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மற்ற 4 பேரையும் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்