< Back
மாநில செய்திகள்
பெண் வனக்காவலரை கடத்த முயன்ற டிரைவர் கைது
தேனி
மாநில செய்திகள்

பெண் வனக்காவலரை கடத்த முயன்ற டிரைவர் கைது

தினத்தந்தி
|
19 Oct 2023 6:15 AM IST

பெரியகுளத்தில் ஆட்டோவில் சவாரி செய்த பெண் வனக் காவலரை கடத்த முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

பெண் வனக்காவலர்

தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா கத்தரிப்பட்டியை சேர்ந்தவர் மல்லிகா (வயது 40). இவர் தீர்த்தமலை வனச்சரகத்தில் வனக்காவலராக பணியாற்றி வருகிறார். அவர், தேனி மாவட்டம் வைகை அணை பகுதியில் உள்ள வனவியல் பயிற்சி கல்லூரியில் வன காவலர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க கடந்த 16-ந்தேதி அதிகாலை 3 மணியளவில் பெரியகுளத்துக்கு பஸ்சில் வந்தார். பஸ் நிலையத்துக்குள் செல்லாமல் மூன்றாந்தல் பகுதியில் நின்றது. இதனால், அவர் அங்கு இறங்கினார்.

சிறிது நேரத்தில் அதே பயிற்சியில் பங்கேற்க சேலம் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு வனக்காவலர் சாமிவேல் என்பவர் வந்தார். அங்கு ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆகிக் கொண்ட அவர்கள் 2 பேரும் அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவில் ஏறி, பெரியகுளம் பஸ் நிலையத்துக்கு செல்லுமாறு கூறினர்.

ஆட்டோவில் கடத்தல்

அந்த ஆட்டோ டிரைவர் அவர்களை பஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாக கூறிவிட்டு, அவர்களை தேனி சாலையில் சுமார் 8 கி.மீ. தூரம் கடந்து அழைத்துச் சென்றார். சந்தேகம் அடைந்த இருவரும் ஆட்டோவை நிறுத்தச் சொல்லி சத்தம் போட்டனர். பின்னர் ஆட்டோவை டிரைவர் நிறுத்தினார். ஆட்டோவில் இருந்து முதலில் சாமிவேல் இறங்கினார். மல்லிகா இறங்குவதற்குள் டிரைவர் ஆட்டோவை வேகமாக ஓட்டிச் சென்றார். அவர் சத்தம் போட்டும் ஆட்டோவை நிறுத்தவில்லை. தன்னை கடத்திச் செல்வதை அறிந்த மல்லிகா ஆட்டோவில் இருந்து கீழே குதித்தார். அதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து மல்லிகா கொடுத்த புகாரின்பேரில் அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற ஆட்டோ டிரைவர் குறித்து விசாரணை நடத்தினர். ஆட்டோ வந்த வழிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் சேகரித்து துப்பு துலக்கினர்.

டிரைவர் கைது

அப்போது இந்த கடத்தல் முயற்சியில் ஈடுபட்டது போடி தாலுகா அகமலை கிராமத்தை சேர்ந்த பால்பாண்டியன் மகன் நவநீதகிருஷ்ணன் (22) என்பதும், அவர் தற்போது பெரியகுளம் வடகரை பகுதியில் வசித்து வருவதாகவும் தெரியவந்தது. இதையடுத்து நவநீதகிருஷ்ணனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

விசாரணையில் அவர் மீது, அகமலையில் வீடு புகுந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தொடர்பாக தென்கரை போலீஸ் நிலையத்திலும், மற்றொரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தொடர்பாக தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்தது. மேலும், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சிறையில் இருந்து வெளிவந்த நிலையில் மீண்டும் பெண் வனக்காவலரை கடத்த முயன்று கைதாகி இருப்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்