திண்டுக்கல்
கொடைக்கானல் பஸ் நிலையத்தில் டிரைவர், கண்டக்டர் மோதல்
|கொடைக்கானல் பஸ் நிலையத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பஸ்சை எடுக்காததால் ஏற்பட்ட தகராறில் டிரைவர், கண்டக்டர் மோதிக்கொண்டனர்.
கொடைக்கானல் பஸ் நிலையத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பஸ்சை எடுக்காததால் ஏற்பட்ட தகராறில் டிரைவர், கண்டக்டர் மோதிக்கொண்டனர்.
டிரைவர், கண்டக்டர் மோதல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் கொடைக்கானல் பஸ் நிலையத்திற்கு வந்து, பயணிகளை ஏற்றிச்செல்கின்றன. சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் என எப்போதும் கொடைக்கானல் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் மதுரையில் இருந்து இயக்கப்படும் ஏ.சி. வசதி கொண்ட அரசு விரைவு பஸ்சும், மற்றொரு சாதாரண அரசு பஸ்சும் கொடைக்கானல் பஸ் நிலையத்திற்கு வந்தன. இதில், ஏ.சி. பஸ் காலை 9.15 மணிக்கு மதுரை நோக்கி புறப்பட்டு செல்ல வேண்டும். அதேபோல் 9.30 மணிக்கு சாதாரண பஸ் மதுரைக்கு புறப்படுவது வழக்கம்.
ஆனால் ஏ.சி. பஸ் 9.15 மணிக்கு மேல் ஆகியும் புறப்படாமல் நின்றது. இதுகுறித்து சாதாரண பஸ்சின் கண்டக்டர், ஏ.சி. பஸ்சின் டிரைவரிடம் தட்டிக்கேட்டார். அப்போது 2 பேருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் 2 பேரும் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், ஒருவரையொருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டனர்.
பரபரப்பு
இதனை பார்த்த மற்ற கண்டக்டர்கள், டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து மோதலில் ஈடுபட்ட 2 பேரையும் சமாதானம் செய்து விலக்கிவிட்டனர். பின்னர் ஏ.சி. பஸ் அங்கிருந்து புறப்பட்டு மதுரை நோக்கி சென்றது. சிறிது நேரத்துக்கு பிறகு சாதாரண பஸ்சும் புறப்பட்டு சென்றது.
இந்த சம்பவத்தால் கொடைக்கானல் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் மோதிக்கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.