புதுக்கோட்டை
அதிவேகமாக ரெயிலை இயக்கிசோதனை ஓட்டம்
|திருச்சி-காரைக்குடி வழித்தடத்தில் அதிவேகமாக ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.
ரெயில்கள் வேகம்
திருச்சி-காரைக்குடி அகல ரெயில்பாதை சமீபத்தில் மின்மயமாக்கம் செய்யப்பட்டன. இதையடுத்து இந்த வழித்தடத்தில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன. புதுக்கோட்டை வழியாக செல்லும் இந்த பாதையில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பயணிகள் ரெயில்கள் அதிகம் இயக்கப்படுகின்றன.
இதில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் 90 முதல் 100 கிலோ மீட்டர் வரை உள்ளது. இந்த நிலையில் திருச்சி-காரைக்குடி வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகத்தை 110 கிலோ மீட்டராக அதிகரிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்த வழித்தடத்தில் தண்டவாள பாதைகள் ஆய்வு செய்யப்பட்டன.
சோதனை ஓட்டம்
இந்த நிலையில் திருச்சி-காரைக்குடி வழித்தடத்தில் இன்று அதிவேகமாக ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. திருச்சியில் இருந்து காலை 9.50 மணிக்கு ரெயில் புறப்பட்டது. புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு காலை 10.15 மணி அளவில் வந்து பின்னர் காரைக்குடி நோக்கி சென்றது. மணிக்கு சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டதாக ரெயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சோதனை ஓட்டத்தையொட்டி அந்த நேரத்தில் இந்த வழித்தடத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தன. ரெயில் கடந்து செல்லும் நேரத்தில் தண்டவாளத்தை பொதுமக்கள் யாரும் கடந்து செல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இந்த சோதனை ஓட்டம் ஒருபுறம் வேகத்தை அதிகரிப்பதற்காக நடத்தப்பட்டு இருந்தாலும், தண்டவாளத்தின் உறுதித்தன்மையையும் ஆய்வு செய்யும் வகையிலும் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.