< Back
மாநில செய்திகள்
குடிநீர் சுத்திகரிப்பான் நிறுவனம் ஓய்வுபெற்ற நீதிபதிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்- நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
அரியலூர்
மாநில செய்திகள்

குடிநீர் சுத்திகரிப்பான் நிறுவனம் ஓய்வுபெற்ற நீதிபதிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்- நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

தினத்தந்தி
|
6 Oct 2022 8:15 PM GMT

குடிநீர் சுத்திகரிப்பான் நிறுவனம் ஓய்வுபெற்ற நீதிபதிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

சென்னை மேடவாக்கத்தில் வசித்து வருபவர் மாணிக்கம் (வயது 66). இவர் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஆவார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு குடிநீர் சுத்திகரிப்பு உபகரணத்தை ரூ.22 ஆயிரத்து 500 செலுத்தி வாங்கியுள்ளார். இதற்கிடையே உபகரணத்தின் சில பகுதி வேலை செய்யாததால் யுரேகா போர்ப்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் பிரதிநிதி தமது அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்புவதாக கூறி சீட்டு ஒன்றை அளித்து விட்டு சென்றுள்ளார். ஆனால் அந்த நிறுவனத்தை பலமுறை தொடர்பு கொண்டும் குறைபாடு சரி செய்யப்படவில்லை. இதனால் அந்த நிறுவனத்தின் மீது ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம், சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை மாதத்தில் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பின் விவரம் வருமாறு:- குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம் விற்பனை செய்யப்பட்ட பின்பு உத்தரவாதம் நிறுவனத்தால் அளிக்கப்பட்டுள்ள காலத்தில் பழுது ஏற்படும் போது அதனை நீக்கி தர வேண்டியது அந்த நிறுவனத்தின் கடமையாகும். ஆனால், அதனை விற்பனையாளர் செய்ய தவறிவிட்டார் என்பதை புகார்தாரர் தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே புகார்தாரருக்கு குடிநீர் சுத்திகரிப்பான் உபகரணத்தை மாற்றி புதிய உபகரணத்தை வழங்க வேண்டும் அல்லது அவர் செலுத்திய ரூ.22 ஆயிரத்து 500-ஐ 13-10-2015-ம் தேதியிலிருந்து ஆண்டொன்றுக்கு நூற்றுக்கு 6 சதவீத வட்டி கணக்கிட்டு புகார்தாரருக்கு யுரேகா போர்ப்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும். சேவை குறைபாட்டிற்கும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு புகார்தாரருக்கு நிறுவனத்தினர் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். இதனை 4 வாரத்துக்குள் நிறைவேற்ற வேண்டும். தவறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்