சென்னையில் 7 மண்டலங்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
|சென்னையில் 7 மண்டலங்களில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் 2 நாட்கள் நிறுத்தப்படுகிறது
சென்னை,
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பில், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் (போரூர் சந்திப்பு) குடிநீர் பிரதான குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளபட உள்ளது. இதன்காரணமாக, சென்னையில் 7 மண்டலங்களில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் இன்று (வியாழக்கிழமை) இரவு 9 மணி முதல் வருகிற 27-ந்தேதி இரவு 9 மணி வரை 2 நாட்கள் நிறுத்தப்படுகிறது.அதன்படி, அம்பத்தூர் மண்டலத்தில் அத்திப்பட்டு, பாடி, பார்க்ரோடு, டி.எஸ்.கிருஷ்ணா நகர், முகப்பேர் மேற்கு, முகப்பேர் கிழக்கு, அண்ணாநகர் மண்டலத்தை பொறுத்தவரையில் அரும்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.
தேனாம்பேட்டை மண்டலத்தில் திருவல்லிகேணி, ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், மயிலாப்பூர் பகுதிகளிலும், கோடம்பாக்கம் மண்டலத்தில் கோயம்பேடு, விருகம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி பகுதிகளிலும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். வளசரவாக்கம் மற்றும் ஆலந்தூர் மண்டலத்தில் அனைத்து பகுதிகளிலும், அடையாறு மண்டலத்தில் ஆர்.ஏ.புரம், அடையாறு, வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர் பகுதிகளிலும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள https://cmwssb.tn.gov.in/என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளில், தொட்டிகள் மற்றும் தெரு நடைகள் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 044-45674567 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.