கன்னியாகுமரி
நன்றாக மழை பெய்தும் 8 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவது ஏன்?;பத்மநாபபுரம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி
|நன்றாக மழை பெய்தும் 8 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவது ஏன்? என்பது குறித்து பத்மநாபபுரம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்
தக்கலை,
நன்றாக மழை பெய்தும் 8 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவது ஏன்? என்பது குறித்து பத்மநாபபுரம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
பத்மநாபபுரம் நகராட்சி கூட்டம்
பத்மநாபபுரம் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் அருள் சோபன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் மணி, ஆணையர் காஞ்சனா, என்ஜினீயர் லதா, சுகாதார அலுவலர் ராஜாராம் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பேசினர். அப்போது நடந்த காரசார விவாதம் வருமாறு:-
குடிநீர் பிரச்சினை
மும்தாஜ்:-நன்றாக மழை பெய்துள்ளது. ஆனாலும் எனது வார்டில் 8 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வருகிறது. ஓடையில் சிலாப் இல்லை. தெருவிளக்கு சரியாக எரியவில்லை. இதேபோல் மற்றொரு கவுன்சிலரும் குடிநீர் பிரச்சினையை எழுப்பினார்.
தலைவர்:- 3 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கூறியிருக்கிறேன். ஏன் தண்ணீர் கொடுக்க முடியவில்லை என்பதை அதிகாரி விளக்க வேண்டும்.
என்ஜினீயர்:- குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தண்ணீர் பெறப்படுகிறது. தற்போது அங்கு பராமரிப்பு பணிகள் நடப்பதால் முறையாக குடிநீர் கிடைக்கவில்லை. ஜூன் மாதத்தில் இருந்து குடிநீர் வினியோகம் சீராக இருக்கும்.
வீட்டில் கழிவுநீர் தொட்டி
வினோத்குமார்:-குடிநீர் பிரச்சினை 21 வார்டுகளிலும் உள்ளன. இதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துணைத்தலைவர்:- எந்த வார்டிலும் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை. எனக்கு தனி அறை இதுவரை ஒதுக்கவில்லை.
நாகராஜன்:-லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
தலைவர்:- 4 டேங்கர் லாரிகளை வாடகைக்கு எடுத்து அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெயசுதா:- வீடுகளில் உள்ள கழிவுநீரை ஓடையில் விடாமல் வீட்டிலே தொட்டி கட்ட வேண்டும் என்கிறார்கள். அதற்கு வசதி இல்லாத ஏழைகளால் எப்படி முடியும்.
வீடு வழங்கும் திட்டம்
சுகாதார அலுவலர்:- அரசின் உத்தரவுபடி தான் கூறியுள்ளோம். வசதியில்லாதவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது.
மும்தாஜ்:- பாதாள சாக்கடை திட்டத்தை நகராட்சியில் செயல்படுத்தலாமே?
உண்ணிகிருஷ்ணன்:-நகராட்சி பகுதியில் அனுமதி இல்லாமல் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் அப்புறப்படுத்தாமல் உள்ளது. இதேபோல் கழிவுநீர் தொட்டிகள் அமைக்க முதலில் ஆஸ்பத்திரி, ஓட்டல், அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் நடைமுறைபடுத்துங்கள்.
கீதா:-எனது வார்டில் 2 மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. சாலையும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இரவு நேரத்தில் நடந்து செல்பவர்கள் தட்டுத்தடுமாறி கீழே விழுந்து செல்லும் நிலை உள்ளது.
உண்ணிகிருஷ்ணன்:- பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்திற்காக பயனாளிகள் விண்ணப்பிக்க முன்பு நகராட்சியில் தனிப்பிரிவு இருந்தது. ஆனால் இப்போது நாகர்கோவிலுக்கு போக சொல்கிறார்கள். இதனால் பயனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வறுமைக்கோடு பட்டியல்
ஜெயசுதா:-வறுமைக்கோடு பட்டியலில் புதிதாக ஏழைகளை சேர்க்க வேண்டும்.
சுகாதார அலுவலர்:-புதிய பட்டியல் எடுக்க அரசிடமிருந்து இன்னும் உத்தரவு வரவில்லை.
ஷேக் முகம்மது:- அம்மா உணவகத்தின் சிலாப் உடைந்து விழுகிறது. அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.