சென்னை
புதுப்பித்தல் பணி நடைபெறுவதால் குடிநீர் வழங்கல் அலுவலக இணையதள சேவைகள் 28, 29-ந் தேதிகளில் செயல்படாது - சென்னை பெருநகர குடிநீர் வாரியம்
|புதுப்பித்தல் பணி நடைபெறுவதால் குடிநீர் வழங்கல் அலுவலக இணையதள சேவைகள் 28, 29-ந் தேதிகளில் செயல்படாது என சென்னை பெருநகர குடிநீர் வாரியம் கூறியுள்ளது.
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை குடிநீர் வாரிய சிந்தாதிரிப்பேட்டை தலைமை அலுவலகத்தில் புதுப்பித்தல் பணி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தரவு மையத்தில் (டேட்டா சென்டர்) புதிய மின்சார கேபிள் மாற்றி அமைக்கும் பணி வருகிற 28-ந் தேதி(சனிக்கிழமை) காலை 6 மணி முதல் 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால், இணையதள வழியாக பெறப்படும் சேவைகளாகிய குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்துதல், கட்டணம் செலுத்தி லாரிகள் மூலம் பெறப்படும் குடிநீர், புதிய குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு விண்ணப்பித்தல், பொதுமக்கள் குறை தீர்க்கும் மையம் மற்றும் எம்.ஆர்.சி. நகரில் தற்போது இயங்கும் தலைமை அலுவலக இணையதள இணைப்பு ஆகிய அனைத்து சேவைகளும் செயல்படாது. மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு தினசரி லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் புதிய மின்சார கேபிள் மாற்றியமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு வருகிற 30-ந் தேதி காலை 10 மணி முதல் வழக்கம் போல் இணையதள சேவைகள் அனைத்தும் செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.