< Back
மாநில செய்திகள்
குடிநீர் சீராக வழங்க வேண்டும்; மேயரிடம் பொதுமக்கள் மனு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

குடிநீர் சீராக வழங்க வேண்டும்; மேயரிடம் பொதுமக்கள் மனு

தினத்தந்தி
|
4 Oct 2023 2:42 AM IST

பாளையங்கோட்டை எம்.எல்.பிள்ளைநகரில் குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்று மேயரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். துணை ஆணையாளர் தாணுமூர்த்தி, செயற்பொறியாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேட்டை 18-வது வார்டுக்கு உட்பட்ட நேருஜிநினைவு நகர் பொதுமக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், நேருஜி நினைவு நகர் பகுதியில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், அந்த பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன் தலைமையில் வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், மேலப்பாளையம் மண்டலம், வார்டு 46-க்கு உட்பட்ட மேலநத்தம் டாக்டர் அம்பேத்கர் காலனி, முப்புடாதி அம்மன் கோவிலின் கீழ்பக்கத்தில் உள்ள இடமானது மக்கள் பயன்பாட்டிற்கும், சிறுவர் விளையாடும் இடமாகவும் இருந்தது. தற்போது அந்த நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்து மாட்டுதொழுவத்தை கட்டியுள்ளார். உடனடியாக அந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ள மாட்டு தொழுவத்தை அகற்றவேண்டும். மேலும் அந்த அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறியுள்ளனர்.

நெல்லை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட போலி இறப்பு சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத் தலைவர் மாரியப்ப பாண்டியன், இந்து மக்கள் கட்சி நிர்வாகி முத்துப்பாண்டியன் ஆகியோர் மேயரிடம் மனு கொடுத்தனர்.

பாளையங்கோட்டை எம்.எல்.பிள்ளைநகரில் சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

நெல்லை டவுன் பாரதியார் உயர்நிலைப்பள்ளிக்கு குடிநீர் குழாய்களை சரி செய்து தர வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர் மனு கொடுத்தார். மேலப்பாளையம் ஆண்டவர் 3-வது தெருவில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்