கள்ளக்குறிச்சி
20 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
|நிலுவை கட்டணம் செலுத்தாததால் 20 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு சங்கராபுரம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை
சங்கராபுரம்
சங்கராபுரம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் சில வார்டுகளில் வீடுகளில் குடிநீர் இணைப்புக்கு கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கட்டணத்தை கட்ட சொல்லி பலமுறை அறிவுறுத்தியும் சம்பந்தப்பட்ட நபர்கள் கட்டணத்தை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார் தலைமையில், இளநிலை உதவியாளர் ஜெயப்பிரகாஷ், வரி தண்டலர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் குடிநீர் இணைப்புக்கான நிலுவை கட்டணத்தை செலுத்தாத 20 வீடுகளின் குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். மேலும் நடப்பு நிதியாண்டு 2022-23 வரை பேரூராட்சியில் செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில் வரி, உரிமை கட்டணம் குடிநீர் கட்டணம், குத்தகை இனங்கள் மற்றும் வரியில்லா இனங்களுக்கு வருகின்ற 10-ந் தேதிக்குள் நிலுவையின்றி வரியை கட்ட வேண்டும், தவறினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செயல் அலுவலர் சம்பத்குமார் தெரிவித்தார்.