திருவாரூர்
குடிநீர், கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்
|குடிநீர், கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்
தில்லைவிளாகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிநீர், கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு மேல்நிலைப்பள்ளி
முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களுக்கும் இயற்கை உபாதைகளை கழிக்க செல்வதற்கான கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கழிவறை கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டிடத்தில் தண்ணீர் இல்லாமல் அசுத்தமாக காணப்படுகிறது. பராமரிப்பின்றி கிடப்பதால் இதனை பயன்படுத்தும் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
குடிநீர், கழிவறை வசதி வேண்டும்
இந்த பள்ளியில் குடிதண்ணீர் கடந்த 10 நாட்களாக வரவில்லை. இதனால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வாங்கி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக இப்பள்ளி தலைமை ஆசிரியர் இல்லாமல் இயங்கி வருகிறது. இதனால் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை ஆகியவற்றை ஏற்படுத்தி தர வேண்டும் என்று பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.