சென்னை
சாத்தங்குப்பம், திருமலைநகரில் படகுகள் நிறுத்தும் பகுதிகளில் தூர்வாரும் பணி - அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் நடத்தியது
|அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் சார்பில் சாத்தங்குப்பம், திருமலைநகரில் படகுகள் நிறுத்தும் பகுதிகளில் தூர்வாரும் பணி நடந்தது.
வடசென்னையில் உள்ள அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் சார்பில் சாத்தங்குப்பம் மற்றும் திருமலைநகர் கிராமத்தில் படகுகள் நிறுத்தும் பகுதிகளை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 14 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 346 குடும்பங்கள் பயனடையும். முன்னதாக இதையொட்டி நடந்த பூஜையில் அதானி காட்டுப்பள்ளி மற்றும் எண்ணூர் துறைமுகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுதீப் தாஸ்குப்தா கலந்துகொண்டார்.
இதுகுறித்து அதானி காட்டுப்பள்ளி துறைமுக அதிகாரிகள் கூறியதாவது:-
பருவமழை மற்றும் இயற்கை பேரழிவுகளின் போது மீனவர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்துக்கு முக்கியமான படகுகளை பாதுகாப்பதில் இந்த பணி ஒரு குறிப்பிடத்தக்க சவாலாகும். கனமழை மற்றும் எதிர்பாராத பேரழிவுகளால் மீனவர்களின் படகுகள் சேதமடைகின்றன.
பிப்ரவரி முதல் அக்டோபர் நடுப்பகுதி வரை படகு நிறுத்தும் பகுதிகளில் குறைந்த நீர்மட்டம் மற்றும் வண்டல் படிவு ஆகியவை மீனவர்களுக்கு உண்மையில் சவாலாக உள்ளன. படகுகளை உடல் ரீதியாக தள்ளி நிறுத்துவது மீனவர்களுக்கு காயங்கள் மற்றும் கூடுதல் சிரமங்களுக்கு வழிவகுக்கும். படகுகள் நிறுத்தும் இடங்களை பராமரித்தல் மூலம் மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
சாத்தங்குப்பம், குணாங்குப்பம், திருமலைநகர், செம்பாசிப்பள்ளி, லைட்ஹவுஸ் நடுக்குப்பம், வைரவன்குப்பம், பாசியாவரம், குளத்துமேடு, எடமணி குப்பம், எடமணி காலனி, இஸ்ரேல் நகர், கரிமனல், காரையார் குப்பம், ரஹ்மத் நகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஊராட்சி மற்றும் பாரம்பரிய தலைவர்கள் தங்கள் படகு நிறுத்தும் இடங்களை தூர்வார உதவுமாறு அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்தை அணுகியுள்ளனர். மீனவ சமூகங்களின் தேவைகளை கருத்தில் கொண்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்க, அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் மீனவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.