பெண்கள் உரிமை, மேம்பாட்டை திராவிட மாடல் அரசு உறுதிப்படுத்தும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|உலக மகளிர் தினத்தை முன்னிட்டு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது;
மகளிருக்கான உரிமையை நிலைநாட்டியதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு, நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. திராவிட இயக்கத்தின் அறிவாசான், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தலைமையில் 1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவர் வழியில் வந்த பேரறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், சுயமரியாதைத் திருமணத்திற்கு அங்கீகாரமளிக்கும் சட்டத்தை அவர் நிறைவேற்றினார். பேரறிஞர் அண்ணாவுக்குப் பின்னர் முதலமைச்சரான முத்தமிழறிஞர் கலைஞர், பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றினார்.
இந்த ஆண்டு பிப்ரவரி 21-ம் நாள், தமிழ்நாட்டில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் "தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024"-ஐ வெளியிட்டோம்.
•அதில், பாலின உணர்திறன் கொண்ட கல்வி முறையை நிறுவுதல் மற்றும் பெண்குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்தல்.
•வளரிளம் பெண்கள் மற்றும் மகளிரின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல்.
•வேலைவாய்ப்புகளில் மகளிரின் பங்களிப்பை அதிகரித்தல்.
•அனைத்து அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத பணிகளில் உள்ள பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் அவர்களுக்கு உகந்த பணியிடங்களை உறுதிசெய்தல்.
•பெண்கள் நிர்வகிக்கும் சிறு தொழில்கள் மற்றும் அவர்கள் மேற்கொள்ளும் புதிய தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளித்தல்.
•பெண்கள் அதிக ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவித்து டிஜிட்டல் பாலின இடைவெளியைக் குறைத்தல்.
•தொழில் துறையில், பயிற்சி மற்றும் திறன்மேம்பாட்டை வழங்குவதன் மூலம் மகளிரிடையே நிலவும் திறன் இடைவெளியைக் குறைத்தல்.
•நிறுவனக் கடன் வசதிகளை அணுகுதல் மற்றும் தேவைப்படும் மகளிருக்கு வங்கி கடனுதவி அதிகம் கிடைப்பதற்கு வழிவகை செய்தல்.
•மகளிரை அரசியல் களத்தில் பங்கேற்க ஊக்கப்படுத்துதல்.
ஆகிய கோட்பாடுகளை இலக்காக வைத்துச் செயல்படத் திராவிட மாடல் அரசு தீர்மானித்துள்ளது.
பெண் விடுதலை என்பதே முழுமையான சமூக விடுதலை என்ற முழுமையான புரிதலுடன், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வழியில், நமது திராவிட மாடல் அரசு, பெண்கள் உரிமை மற்றும் மேம்பாட்டை உறுதிப்படுத்தும் பல்வேறு திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தி வருகிறது. சமூகத்தின் சரிபாதியான பெண்கள் அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும், நலன்களையும் முழுமையாகப் பெறும் வரை அதை நோக்கிய நமது பயணம் தொடரும் என்ற உறுதியுடன் பெண்கள் அனைவருக்கும் மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.