அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
|அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி புதுக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்கள் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
கர்ப்பிணி பெண்களின் நலனை கருத்தில்கொண்டும், ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கவும் அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோக கர்ப்பிணி பெண்களுக்கு முத்துலட்சுமிரெட்டி திட்டத்தின் மூலம் ரூ.12ஆயிரம் வழங்கப்படுகிறது.
பெண்கள் வளர்ச்சியில் முதல்-அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். அரசு பள்ளியில் படித்து முடித்து கல்லூரி செல்லும் போது ஆயிரம் உதவித்தொகை என பல்வேறு திட்டங்கள் பெண்களுக்காகவே உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.