சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தோழன் திராவிட மாடல் அரசு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
|ரூ.184 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
சென்னை,
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது;
"நம்முடைய நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய சிட்கோ நிறுவனத்தின் வளர்ச்சியை நம்முடைய முதலமைச்சர் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். இதன் அடையாளமாக சுமார் ரூ.184 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சிட்கோ வளாகத்தில் இன்று பங்கேற்றோம். அதன்படி, கிண்டி தொழிற்பேட்டையில் ரூ.94.67 கோடி மதிப்பிலும், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ.63.95 கோடி மதிப்பிலும் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி தொழில் வளாகங்களை இன்று திறந்து வைத்தோம்.
மேலும், சிட்கோ தொழிலாளர்களின் பயணச் சுமையை குறைப்பதற்காக அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 1.22 லட்சம் சதுர பரப்பளவில் ரூ.24.47 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்தோம். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தோழனாக திகழும் நம் திராவிட மாடல் அரசு, அதன் வளர்ச்சிக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என உரையாற்றினோம்." என தெரிவித்துள்ளார்.