< Back
மாநில செய்திகள்
திருமணம் செய்ய மறுத்த காதலனை போலீசில் சிக்க வைக்க கூட்டு பலாத்காரம் என புகார் அளித்த இளம்பெண்ணின் நாடகம் அம்பலம்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

திருமணம் செய்ய மறுத்த காதலனை போலீசில் சிக்க வைக்க கூட்டு பலாத்காரம் என புகார் அளித்த இளம்பெண்ணின் நாடகம் அம்பலம்

தினத்தந்தி
|
6 Feb 2023 12:30 PM IST

உத்திரமேரூர் அருகே கூட்டு பலாத்காரம் செய்ததாக இளம்பெண் குற்றம்சாட்டினார். போலீஸ் விசாரணையில் அந்த பெண் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.

கூட்டு பலாத்காரம்

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 21வயது பெண் சைதாப்பேட்டையில் தங்கி டெலிகாலராக தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உத்திரமேரூர் அருகே உள்ள மாம்பாக்கம் பகுதியில் தன்னை 4 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததாக அங்கு இருந்த பொதுமக்களிடம் தெரிவித்தார். இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் புகார் தெரிவித்தார். இது பற்றி அறிந்ததும் சாலவாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த பெண் போலீசாரிடம் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் சைதாப்பேட்டை செல்ல காத்திருந்தேன் அப்போது அங்கு வந்த 4 பேர் என்னை மிரட்டி வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். பின்னர் அவர்கள் கூட்டாக பலாத்காரம் செய்து விட்டு தப்பிச்சென்று விட்டனர் என்று தெரிவித்தார்.

காதல்

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கூட்டு பலாத்காரம் செய்ததாக இளம்பெண் கூறியது நாடகம் என்பது தெரியவந்தது.

மேலும் அவரும் உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் 2 மாதமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு ரெயில் நிலையம் வந்த அந்த பெண்ணின் காதலன் அவரை மாம்பாக்கம் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். செங்கல்பட்டு ரெயில் நிலைய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த பெண் காதலன் என்று சொன்ன வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் தனியாக சென்றது தெரிய வந்தது.

வாலிபரிடம் விசாரணை

இதை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அந்த பெண் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உத்திரமேரூர் அருகே கூட்டு பலாத்காரம் செய்ததாக இளம்பெண் புகார் அளித்தது பொய் என்பது தெரியவந்துள்ளது. காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவ்வாறு நடந்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்