< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் கால்வாயாக மாறிய வாய்க்கால்கள்

தினத்தந்தி
|
21 Oct 2023 2:09 AM IST

கும்பகோணம் மாநகராட்சியில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் வாய்க்கால்கள் கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது. இதனை தூர்வார உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாய நிலங்கள்

கும்பகோணம் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் பிரிந்து 5-க்கும் மேற்பட்ட வாய்க்கால்கள் மூலமாக கும்பகோணம் மாநகராட்சி வழியாக சென்று செட்டிமண்டபம் பகுதியில் ஒன்று சேர்ந்து ஐந்து தலைப்பு வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு செல்கின்றன.

இதே போல் அந்த வாய்க்கால்கள் கும்பகோணம் மாநகரத்திற்கு குடிநீர் ஆதாரமாகவும், மற்ற உபயோகத்திற்கும் பயன்பட்டு வந்தன. மேலும் கும்பகோணத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டது.

தூர்வாரப்படவில்லை

இந்த வாய்க்கால்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதால் காலபோக்கில் ஆக்கிரமிக்கப்பட்டு அவை அனைத்தும் கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டன. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மகாமகத்தின் போது கும்பகோணத்தில் உள்ள வாய்க்கால்களை தூர்வாரி சுத்தப்படுத்துவதற்காக ரூ.1.20 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தது. ஆனால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கால்வாய்கள் மேலும் மோசம் அடைந்து. அனைத்து வாய்க்கால்களும் குப்பை சேர்ந்து அருகில் உள்ள வீடுகளின் கழிவுநீரும் கலந்து தற்போது கழிவுநீர் வாய்க்கால் போல் மாறிவிட்டது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கழிவுநீர் வாய்க்கால்கள்

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மாநகராட்சியில் உள்ள வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், முன்பெல்லாம் ஆறுகளில் தண்ணீர் செல்லும் போது இந்த வாய்க்கால்களிலும் தண்ணீர் செல்லும். இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து காணப்பட்டது.

இந்த நிலையில் பல ஆண்டுகளாக வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால், பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தூர்ந்துள்ளது. இதனால் மணல் நிரம்பி தண்ணீர் செல்ல வழியின்றி கழிவுநீர் தேங்கி காட்சி அளிக்கிறது.

துர்நாற்றம்

தண்ணீர் சென்ற வாய்க்கால்கள் தற்போது கழிவுநீர் வாய்க்காலாக மாறியுள்ளது. குறிப்பாக அரசு மகளிா் கல்லூரி அருகே உள்ள வாய்க்கால், ராகவேந்திராநகரில் தெருக்களுக்குள் செல்லும் வாய்க்கால் ஆகியவை உள்பட நகரில் உள்ள அனைத்து வாய்க்கால்களிலும் இந்த நிலைதான்.ராகவேந்திரா நகரில் உள்ள வாய்க்காலில், பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டால் அடைப்பை சரி செய்ய பாதாள சாக்கடையில் இருந்து குழாய் மூலம் கழிவுநீர் கால்வாயில் விடுகின்றனர். அரசு மகளிர் கல்லூரி அருகே உள்ள கால்வாயில் வீடுகள் மற்றும் கடைகளில் உள்ள கழிவுநீர் கலந்து விடுகிறது. ஏற்கனவே கழிவுநீர் தேங்கி இருக்கும் நிலையில் இதுபோல் செய்வது, மேலும் துர்நாற்றம் வீசுகிறது. கும்பகோணம் மாநகரில் உள்ள வாய்க்கால்கள் மற்றும் கால்வாய்களை தூர்வாரி தண்ணீர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்