< Back
மாநில செய்திகள்
வடகிழக்கு பருவமழையை சமாளிக்க மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் கைகொடுக்குமா?    பொதுமக்கள் எதிர்பார்ப்பு
விழுப்புரம்
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழையை சமாளிக்க மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் கைகொடுக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தினத்தந்தி
|
10 Oct 2022 12:15 AM IST

விழுப்புரத்தில் வடகிழக்கு பருவமழையை சமாளிக்க மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் கைகொடுக்குமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


விழுப்புரம் மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் இப்போதே முன்னேற்பாடு நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளது. இதற்காக மாவட்ட கலெக்டர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசின் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி பருவமழையினால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு அதற்கான பணிகளில் ஈடுபட அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலத்தின்போது விழுப்புரம் நகரம் வெள்ளக்காடாக மாறிவிடுகிறது. நகரில் உள்ள பல்வேறு தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து அந்த குடியிருப்புகளில் தத்தளிக்கிறது. அதுபோல் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் முழுவதும் தண்ணீர் தேங்கி ஏரிபோல் காட்சியளிக்கும் நிலை ஏற்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கினாலே விழுப்புரம் மக்களுக்கு பீதியும் வந்துவிடுகிறது. அந்தவகையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழைக்கே தாக்குபிடிக்காத வகையில் பல குடியிருப்புகளிலும், பள்ளமான சாலையிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

வடிகால் வாய்க்கால் பணிகள்

கடந்த காலத்தை எடுத்துக்கொண்டால், பெய்த வடகிழக்கு பருவமழையினால் மக்கள் பட்ட கஷ்டம் கொஞ்சம், நஞ்சமல்ல. இந்த ஆண்டு எதிர்வரும் பருவமழையினால் அந்த நிலையை மக்கள் சந்திக்கக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. குறிப்பாக விழுப்புரம் நகரில் சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் காட்பாடி மார்க்கமாக செல்லும் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் இருந்து தந்தை பெரியார் நகர் வரையும், அதுபோல் நான்குமுனை சந்திப்பில் இருந்து மாம்பழப்பட்டு ரெயில்வே கேட் வரையும் சாலையின் இருபுறமும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.


தற்போது சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் அந்த மழைநீரும் கோலியனூரான் வாய்க்கால் வழியாக செல்ல முடியாத நிலை உள்ளது. ஏனெனில் வடிகால் வாய்க்கால் பாலம் பணிக்காக கோலியனூரான் வாய்க்காலின் இருபுறமும் வாய்க்காலை அடைத்துவிட்டு பாலம் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு மாத காலத்திற்குள் இப்பணிகளை முடிக்காவிட்டால் பருவமழையின்போது விழுப்புரம் நகரம் வெள்ளக்காடாக மாறி ஏராளமான குடியிருப்புகள் தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்படும்.

கந்தல், கந்தலாக கிடக்கும் சாலைகள்

இது ஒருபுறம் இருக்க விழுப்புரம் நகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட 5 ஊராட்சிகளான காகுப்பம், பானாம்பட்டு, எருமனந்தாங்கல், வழுதரெட்டி, சாலாமேடு ஆகிய பகுதிகளில் உள்ள 17 வார்டுகளில் பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டி மற்றும் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்கு ரூ.1 கோடியே 60 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அப்பகுதிகளில் ஏற்கனவே இருந்த தார் சாலை, சிமெண்டு சாலைகளை உடைத்து பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடாமலும், சாலை மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததாலும் கடந்த 1½ மாதத்துக்கு முன்பு பெய்த தொடர் மழையினால் அங்குள்ள சாலைகள் கந்தல், கந்தலாக மாறியது.

குறிப்பாக விழுப்புரம் கே.கே.சாலை மணிநகர் 1, 2, 3, 4-வது தெருக்கள், சாலாமேடு, வழுதரெட்டி ஸ்ரீராம் நகர், நித்யானந்தா நகர் ராஜம் தெரு, கவுதம் நகர், பாண்டியன் நகர், சுப்பிரமணியசாமி நகர், விராட்டிக்குப்பம் பாதை, மகாராஜபுரம், திருவள்ளுவர் நெடுந்தெரு, பாண்டியன் தெரு, வ.உ.சி. தெரு உள்ளிட்ட பல தெருக்களில் உள்ள சாலைகள் சேறும், சகதியுமாக வயல்வெளிபோன்று மாறியது. இதனால் பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகள் சேற்றில் சிக்கி பெரும் இன்னல்களை சந்தித்தனர்.

பணிகள் மும்முரம்

இதையடுத்து பொதுமக்களின் பல்வேறு புகார்களை தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள 17 வார்டு கவுன்சிலர்களை அழைத்து நகராட்சியில் கடந்த செப்டம்பர் மாதம் அவசர கூட்டம் நடத்தப்பட்டு அக்கூட்டத்தில், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து சாலை பணிகள், வடிகால் வாய்க்கால் பணிகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில் விரிவாக்கம் செய்யப்பட்ட மேற்கண்ட 17 வார்டு பகுதிகளிலும் மழைக்காலத்திற்குள் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடித்து குடியிருப்புகளில் தண்ணீர் தேங்காதவாறு முறையாக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி சாலை வசதி, வடிகால் வாய்க்கால் வசதியை ஏற்படுத்த வேண்டுமென குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கும், பணி ஒப்பந்ததாரர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அப்பகுதிகளில் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

கைகொடுக்குமா?

இப்பணிகள் முடிக்கப்பட்டால் மட்டுமே பருவமழை சமயத்தில் அங்குள்ள குடியிருப்புகள் ஓரளவு தப்பிக்கும். இல்லையெனில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் அதனால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க நகராட்சி நிர்வாகத்திற்கு மட்டுமின்றி மாவட்ட நிர்வாகத்திற்கும் பெரும் சவாலாக இருக்கும். ஏனெனில் கடந்த பருவமழை காலங்களில் குடியிருப்புகளில் சூழ்ந்த தண்ணீர் உடனடியாக வெளியேறாததால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே பல இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். அப்படியொரு நிலை ஏற்படாமல் இருக்க இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம், வடிகால் வாய்க்கால் அமைத்தல், வாய்க்கால் பாலம் பணிகளை விரைந்து முடித்தல், வாய்க்காலை தூர்வாருதல், சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளில் முன்கூட்டியே களமிறங்கியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் வடகிழக்கு பருவமழையை சமாளிக்க கைகொடுக்குமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மக்கள் கருத்து

இதுபற்றி விழுப்புரம் சர்வேயர் நகரை சேர்ந்த விஜயா கூறும்போது, எங்கள் தெருவில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்தது. அதன் பிறகு சாலை அமைக்கப்படாமல் மண்ணை கொட்டி சமப்படுத்திவிட்டு சென்றனர். இதனால் சாதாரண மழை பெய்தாலே சேறும், சகதியுமாகி விடுகிறது.

சாதாரண நாட்களில் காய்கறிகள், பழங்களை தள்ளுவண்டிகளில் விற்பவர்களும் மழைக்காலத்திற்குள் எங்கள் தெருவிற்குள் வர தயங்குகின்றனர். அதுபோல் அவசர தேவைக்காக ஆம்புலன்சும் வர முடியாத நிலை ஏற்படுகிறது. இதேபோல்தான் எங்கள் தெருவிற்கு அருகில் உள்ள கணேஷ் நகர், சரவணா நகர், இந்திரா பிரியதர்ஷினி நகர் பகுதியிலும் இதே நிலைமைதான் உள்ளது. எனவே மழைக்காலத்திற்குள் எங்கள் பகுதியில் சாலை வசதி, வடிகால் வாய்க்கால் வசதிகளை ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விழுப்புரம் சரவணன் நகர் பகுதியை சேர்ந்த செல்வி கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள சாலை மேடும், பள்ளமுமாக படுமோசமாக இருக்கிறது. மழைக்காலங்களில் வயல்வெளிபோன்று நாற்றுநடும் அளவிற்கு மாறி விடுகிறது. இதனால் சைக்கிளில் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் வழுக்கி கீழே விழும் நிலை இருக்கிறது.

ஒவ்வொரு மழைக்காலத்தின்போதும் எங்களுக்கு இதே நிலைமைதான் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி போன்ற உடல்நல பாதிப்பு ஏற்பட்டால்கூட அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வாகனங்களில் செல்ல முடியாத நிலைமை இருந்து வருகிறது. எத்தனையோ முறை நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்தவித பலனும் இல்லை என்றார்.

விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் எத்திராஜிலு கூறும்போது, லேசான மழைக்கே நகரின் பல்வேறு பகுதிகள் சகதிக்காடாக மாறி விடுகிறது. நான் வசிக்கும் மகாராஜபுரம் பகுதியிலும் மழைநீர் தேங்காமல் இருக்க முறையான வடிகால் வாய்க்கால் வசதி அமைக்கப்படாததால் மழைக்காலங்களில் குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் குளம்போல் தேங்குவதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகால் வாய்க்கால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மிகவும் முக்கியமாக கோலியனூரான் வாய்க்காலில் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்திவிட்டு வாய்க்காலை தூர்வார வேண்டும். இப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டால் வடகிழக்கு பருவமழையை நல்லபடியாக கடந்துசெல்ல மழைநீர் வடிகால் வாய்க்கால் கைகொடுக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

மேலும் செய்திகள்