< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில்மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிஒருவழிப்பாதையில் வாகனங்கள் இயக்கம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில்மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிஒருவழிப்பாதையில் வாகனங்கள் இயக்கம்

தினத்தந்தி
|
29 March 2023 6:45 PM GMT

விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் ஒருவழிப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன.

மழைநீர் வடிகால் வாய்க்கால்

விழுப்புரம் நகரில் மழைக்காலத்தின்போது முக்கிய சாலையோரங்களிலும், குடியிருப்புகளிலும் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் வடிகால் வாய்க்கால் வசதி இல்லாததாலும், ஏற்கனவே இருந்த சில வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாலும், இன்னும் சில வாய்க்கால்கள் தூர்ந்து போயிருப்பதாலும் சாதாரண மழைக்கே சாலைகளில் மழைநீர் தேங்கி நின்று வெள்ளம்போல் காட்சியளிக்கிறது.

இதனால் மழைக்காலங்களின்போது சாலையோரங்களிலும், குடியிருப்புகளிலும் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் விழுப்புரம் நகரில் சாலையோரங்களின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சில முக்கிய இடங்களில் சாலையை கடந்து செல்லும் வாய்க்காலும் அமைக்கப்பட்டு வருகிறது.

ஒருவழிப்பாதையில்...

அந்த வகையில் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே திருச்சி நெடுஞ்சாலையின் நடுவே தற்போது மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அப்பகுதியில் இடதுபுற சாலையில் வடிகால் வாய்க்கால் சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் தற்போது வலதுபுற சாலையில் வாய்க்கால் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த பணிகள் காரணமாக அப்பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் அனைத்தும் திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் காலை, மாலை வேளைகளில் விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையம் முதல் நான்குமுனை சந்திப்பு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அனைத்தும் மெல்ல ஊர்ந்துகொண்டே செல்கிறது.

3 வாரத்தில் முடியும்

பாலம் அமைக்கும் பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது ஒருபுறம் இருந்தாலும் சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டு வருவதே போக்குவரத்து நெரிலுக்கு முக்கிய காரணமாக இருந்து வருவதாக நகர மக்கள் பலரும் குற்றம்சாட்டினர். இதையடுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவாறு சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்களை ஒழுங்குப்படுத்தி நிறுத்துவதற்கு வசதியாக போக்குவரத்து போலீசார் பேரிகார்டுகள் வைத்தும், சாலைகளில் கயிறு பதித்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த வாய்க்கால் பணிகள் முடிவடையும் வரை வாகனங்கள் ஒருவழிப்பாதையிலேயே இயக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது. ஏற்கனவே இச்சாலையின் இடதுபுறத்தில் வாய்க்கால் சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது அதன் எதிர்புறத்தில் வாய்க்கால் சீரமைக்கப்பட்டு இரு வாய்க்கால்களையும் இணைத்து பாலம் அமைக்கும் பணிகள் ரூ.30 லட்சம் மதிப்பில் நடந்து வருகிறது. இப்பணிகளை 3 வார காலத்திற்குள் விரைந்து முடிக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்