கள்ளக்குறிச்சி
தியாகதுருகம் அருகேவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம்
|தியாகதுருகம் அருகே வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே நாகலூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறும் வடிகால் வாய்க்காலை விவசாயிகள் பலரும் ஆக்கிரமித்து பயிர் செய்து வந்தனர். இதனால் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற முடியாமல், அருகே உள்ள விளை நிலத்துக்குள் புகுந்ததால் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது.
ஆக்கிரமிப்பு தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் உஷா முருகன் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்து இருந்தார். இதையடுத்து நில அளவையர் விஜயசாந்தி தலைமையிலான வருவாய்த்துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு அளவிடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.இதன் பின்னர், தாசில்தார் பிரபாகரன் தலைமையில் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆக்கிரமித்திருந்த வாய்க்காலை பொக்லைன் எந்திரத்தின் மூலம் அகற்றி வாய்க்கால் வெட்டினர்.
அப்போது வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் உஷா முருகன், ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.