காஞ்சிபுரம்
காதலியுடன் ஏற்பட்ட தகராறில் ரூ.40 லட்சம் சொகுசு காரை தீ வைத்து எரித்த டாக்டர்
|காதலியுடன் ஏற்பட்ட தகராறில் டாக்டர் தனது ரூ.40 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்தவர் கவின் (வயது 28). இவர், காஞ்சீபுரம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.படிப்பை முடித்து தர்மபுரியில் டாக்டராக உள்ளார்.
கவின், அதே கல்லூரியில் ஒன்றாக படித்த பெண் ஒருவரை காதலித்து வந்தார். தற்போது இருவரும் பிரிந்து விட்டதாக தெரிகிறது.
இந்தநிலையில் காஞ்சீபுரம் அருகே ராஜகுளம் பகுதிக்கு நேற்று வந்த கவின், அங்குள்ள குளக்கரை அருகே தனது காரை நிறுத்திவிட்டு, பிரிந்து சென்ற காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது.
அப்போது காதலியுடன் கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட தகராறில் உணர்ச்சிவசப்பட்ட கவின், தனக்கு சொந்தமான சுமார் ரூ.40 லட்சம் மதிப்பிலான சொகுசு காரை பெட்ரோலை ஊற்றி எரித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் கார் ஒன்று எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புப் துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடானது.
இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சீபுரம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.