பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்ற களத்தில் இறங்கி போராடுவேன் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
|பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்ற களத்தில் இறங்கி போராடுவேன் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில் ஆத்தூரில் நேற்று பா.ம.க. நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
இதில் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினர். பின்னர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக 3 மாவட்டங்களாக பிரிக்கலாம். அப்போதுதான் மிகவும் பின்தங்கிய பகுதிகளான ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு பகுதிகள் முன்னேற்றம் அடையும். ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளையும் சேலம் மாவட்டத்தில் இருந்து பிரித்து ஆத்தூரை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.
மேட்டூர் அணை உபரி நீரை திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதி ஆகியவற்றுடன் இணைக்க வேண்டும். அப்போது வழியில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பினால் தண்ணீர் பிரச்சினையே இருக்காது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த ஆண்டு மட்டும் சுமார் 450 டி.எம்.சி. (1 டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. பனமரத்துப்பட்டி ஏரியை தூர்வாரி அதில் தண்ணீர் விட்டால் சேலம் மாநகருக்கு ஒரு ஆண்டுக்கு தண்ணீர் பிரச்சினையே இருக்காது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. அந்த கடைகளை அகற்றக்கோரி நானும், எங்களது கட்சியினரும் போராடி வருகிறோம். நானே களத்தில் இறங்கி போராட தயாராக உள்ளேன்.
ஆன்லைன் ரம்மியால் 33 பேர் உயிரிழந்துள்ளனர். அதனை தடை செய்யும் சட்டத்துக்கு கவர்னர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது புரியவில்லை. நாளொன்றுக்கு ஆன்லைன் ரம்மி மூலம் ரூ.200 கோடி வருமானம் கிடைக்கிறது. அந்த அளவுக்கு மக்கள் பணத்தை இழக்கிறார்கள். எனவே ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
2026-ம் ஆண்டில் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அதற்கு தகுந்தாற்போல 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்போம்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.