மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை இருமடங்கு உயர்வு -அரசு அறிவிப்பு
|மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பல்வேறு நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு 2013-2014-ம் நிதியாண்டு முதல் அவர்களின் கல்வியினை மேம்படுத்தும் வகையில் 1-ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் வகுப்பிற்கு ஏற்றவாறு கல்வி உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் ரூ.7 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 2023-2024-ம் நிதியாண்டுக்கான மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மானியக்கோரிக்கையின்போது முதல்-அமைச்சரால், 'மாற்றுத்திறன் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும்' என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இரு மடங்காக உயர்வு
அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை இருமடங்காக உயர்த்தி, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.1,000 என்பதை ரூ.2 ஆயிரமாகவும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம் என்று இருந்த உதவித்தொகை ரூ.6 ஆயிரமாகவும், 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.4 ஆயிரம் என்று இருந்ததை ரூ.8 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டு இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
அதேபோல், இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.6 ஆயிரம் என்று இருந்ததை ரூ.12 ஆயிரம் ஆகவும், முதுகலை பட்டம் மற்றும் தொழிற்கல்வி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.7 ஆயிரம் என்பதை ரூ.14 ஆயிரமாகவும் வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.
விண்ணப்பிக்கலாம்
இதனால் சிறப்புக்கல்வி பெறும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி நிலையினை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், மேலும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் இந்த உதவித்தொகையினை பெறுவதற்கு பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், இந்த விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மூலம் பரிசீலனை செய்யப்பட்ட பின் கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.