திருவண்ணாமலை
சிறுமியை கற்பழித்து கொலை செய்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
|சிறுமியை கடத்தி கற்பழித்து கொலை செய்த கூலி தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
சிறுமியை கடத்தி கற்பழித்து கொலை செய்த கூலி தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
சிறுமி கற்பழித்து கொலை
தண்டராம்பட்டு அருகே தென்முடியனூர் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியான கணேசன் (வயது 60) என்பவர் அந்த சிறுமியை கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான கணேசனை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு பின்னர் அவரை கைது செய்தனர்.
இரட்டை ஆயுள் தண்டனை
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடத்தப்பட்டு வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார். இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை கற்பழித்து கொலை செய்த கணேசனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, ரூ.5 ஆயிரம் அபராதமும் செலுத்த உத்தரவிட்டார். பின்னர் அவரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.