இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் தரப்பு புதிய மனு
|தொண்டர்களையும், கட்சியையும் பாதிக்கும் என்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே அ.தி.மு.க. கொடி, சின்னம் தொடர்பான வழக்குகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், அ.தி.மு.க.வின் பெயர், சின்னம், கொடி, லெட்டர்பேடு ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு கடந்த 18-ந்தேதி தீர்ப்பளித்தது.
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம், இந்திய தேர்தல் கமிஷனில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் கட்சியின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான ஏ மற்றும் பி படிவங்களில் நான் கையொப்பம் இடுவதற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும். அல்லது மாற்று ஏற்பாடாக இரு பிரிவினருக்கும் சுயேச்சை சின்னங்களை ஒதுக்கலாம். என குறிப்பிட்டு உள்ளார்.
இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேலும் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அவரது ஆதரவாளரான புகழேந்தி தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி படுதோல்வி அடைவதை அ.தி.மு.க. தொண்டர்கள் விரும்பவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இந்த மனுவை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையம் மற்றும் ஐகோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.