< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல் மாநகராட்சியில் வீடு, வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

திண்டுக்கல் மாநகராட்சியில் வீடு, வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வு

தினத்தந்தி
|
15 Oct 2023 3:00 AM IST

திண்டுக்கல் மாநகராட்சியில் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாநகராட்சியில் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

டெங்கு காய்ச்சல்

மழைக்காலத்தில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவுகிறது. தெருக்களில் தேங்கும் மழைநீர், குடிநீரில் ஏடிஸ் கொசுக்கள் அதிகமாக உருவாகின்றன. எனவே மழைநீர் தேங்குமாறு திறந்தவெளியில் டயர்கள், இளநீர் ஓடுகள், சிரட்டை, உரல் ஆகியவற்றை போடக்கூடாது என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.

ஆனாலும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சை பெற தினமும் 50-க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இதில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் ஏற்கனவே 15 பேர் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வீடுதிரும்பினர். தற்போது 8 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் டெங்கு தடுப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். அதாவது, மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் தொட்டி, குளிர்சாதன பெட்டியில் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உருவாகாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். அதேநேரம் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று திண்டுக்கல்லில் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது டெங்கு காய்ச்சல் பரவும் விதம் குறித்தும், காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்கள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆணையர் விளக்கமளித்தார். மேலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்த விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

மேலும் செய்திகள்