< Back
மாநில செய்திகள்
கதவை உடைத்து துணிகரம் - தனியார் நிறுவன பொதுமேலாளர் வீட்டில் 75 பவுன் நகை கொள்ளை
சென்னை
மாநில செய்திகள்

கதவை உடைத்து துணிகரம் - தனியார் நிறுவன பொதுமேலாளர் வீட்டில் 75 பவுன் நகை கொள்ளை

தினத்தந்தி
|
18 Aug 2023 1:12 PM IST

சேலையூர் அருகே பட்டப்பகலில் தனியார் நிறுவன பொதுமேலாளர் வீட்டின் கதவை உடைத்து 75 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள வேங்கைவாசல் சவுமியநாதபுரம் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 56). என்ஜினீயரான இவர், அதே வேங்கைவாசலில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சகுந்தலா. தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.

நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் வெளிக்கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் மரக்கதவுகளும் கடப்பாரையால் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, 2 பீரோக்களில் வைத்து இருந்த 75 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றதை அறிந்த கொள்ளையர்கள், பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

இதுபற்றி சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்