பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்க கூடாது - ஆம்னி பஸ்களுக்கு அரசு எச்சரிக்கை
|தங்கள் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் ஆம்னி பஸ்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் முழு பயன்பாட்டிற்கு வந்த பிறகு, அதை எதிர்த்து ஒரு சில ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சென்னை புறவழிச்சாலையில் உள்ள போரூர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி ஆகிய இரு இடங்களில் மட்டும் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு அனுமதி அளித்து கோர்ட்டு இடைக்கால உத்தரவு வழங்கியது. ஆனால், சில ஆம்னி பஸ் உரிமையாளர்கள், பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம் என தவறாக புரிந்துக் கொண்டுள்ளனர்.
தங்கள் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் ஆம்னி பஸ்கள் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது. இது, கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாகும். சென்னை புறவழிச்சாலையில் போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளை மட்டுமே பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களாக பஸ் பயணச்சீட்டு முன்பதிவு செயலிகளில் குறிப்பிட வேண்டும்.
பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்குவதை ஆம்னி பஸ்கள் தவிர்க்க வேண்டும். கிளாம்பாக்கத்தில் பஸ் நிலையம் முழு பயன்பாட்டிற்கு வந்த பிறகு, அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து அறிய இயலும். அப்போதுதான் அரசால் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்பதை பொதுமக்களும், ஆம்னி பஸ் உரிமையாளர்களும் கருத்தில் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.