கடலூர்
புத்திசாலித்தனமாக லஞ்சம் வாங்குகிறோம் என கனவு காண வேண்டாம்
|புத்திசாலித்தனமாக லஞ்சம் வாங்குகிறோம் என கனவு காண வேண்டாம் என்றும், எங்களிடம் சிக்காத வரை தான் ராஜாவாக இருக்க முடியும் என சார் பதிவாளர்களுக்கு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழிப்புணர்வு கூட்டம்
கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் சார் பதிவாளர்கள் மற்றும் ஆவண எழுத்தர்களுக்கான ஊழல் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு பத்திர பதிவுத்துறை துணைத்தலைவர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
அரசு ஊழியர்கள் யாரும் அதிகாரம் படைத்தவர்கள் இல்லை. அரசு ஊழியர்கள் அனைவருமே மக்களுக்காக ஊழியம் செய்ய வந்தவர்கள். தமிழகத்தில் அதிகளவில் லஞ்சம் புழங்குவதாக பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுவது வட்டார போக்குவரத்து அலுவலகமும், சார் பதிவாளர் அலுவலகமும் தான்.
வசூல் வேட்டை
லஞ்சம் வாங்கி வசூல் வேட்டை நடத்தலாம் என்று யாரும் கனவு காணாதீர்கள். இது அதற்கான காலம் கிடையாது. பொதுமக்களின் வேதனைகளை புரிந்து கொள்ளுங்கள். பொதுமக்களில் யாராவது சார் பதிவாளர்களை பாராட்டுகிறார்களா?. லஞ்சம் வாங்குகிறவர்கள் எங்களிடம் சிக்காத வரை தான் ராஜாவாக இருப்பார்கள். அதன் பிறகு வெறுக்கிற ஒரு வாழ்க்கையை தான் அவர்கள் வாழ நேரிடும்.
ஏழை-எளிய மக்கள் உங்கள் மீது புகார் கொடுக்கவில்லை என நினைக்கலாம். அவர்கள் வாய கட்டி, வயித்த கட்டி சேர்த்த பணத்தில் ஏதாவது ஒரு சொத்து வாங்கி, அதிலும் பிரச்சினையை சந்திக்க வேண்டாம் என்று தான் புகார் அளிப்பதில்லை. ஆனால் அவர்கள் கொடுக்கின்ற ஒவ்வொரு பணமும், வேதனையுடன் கொடுக்கக்கூடிய லஞ்ச பணம் தான்.
தொழில்நுட்ப வசதி
தற்போது மிகவும் புத்திசாலித்தனமாக லஞ்சம் வாங்குகிறோம் என பலர் கனவு காணலாம். ஆனால் எங்களிடம் அவர்களை பிடிக்க அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் உள்ளது. லஞ்சம் வாங்குபவர்கள் லஞ்சப் பணத்தை எங்கு வேண்டுமானாலும் பதுக்கி வையுங்கள். ஆனால் எங்களை மீறி அவர்களால் லஞ்சப் பணத்தை பதுக்கி வைக்க முடியாது.
ஒரு துளி வேர்வை கூட இல்லாமல் சம்பாதிப்பது, கொள்ளைக்கு சமமானது.
லஞ்சம் வாங்கி பிழைப்பு நடத்தினால், அவர்களுக்கு நோய் தான் வரும். மேலும் லஞ்ச வழக்கில் நாங்கள் கைது செய்து அழைத்து செல்லும்போது டப்பா டப்பாவாக மாத்திரையுடன் வருகின்றார்கள். அதனால் வாங்குகிற ஊதியத்தில் வாழ கற்றுக் கொள்ளுங்கள்.
அதேபோல் ஆவண எழுத்தர்கள் புரோக்கர்களாக தான் செயல்படுகின்றனர். ஒவ்வொரு ஆவண எழுத்தர்களும், எவ்வளவு கட்டணம் அரசு நிர்ணயித்துள்ளது என்பது குறித்து அலுவலகம் முன்பு பொதுமக்கள் பார்வையில் படும்படி பதாகை வைக்க வேண்டும்.
ரசாயனம் தடவிய நோட்டுகள்
நீங்கள் லஞ்சமாக பெறும் பணத்தில் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் எங்களால் பிடிக்கப்பட்டால், அவை அரசுடமையாக்கப்படும். ரசாயனம் தடவிய நோட்டு இருந்தால் மட்டும்தான் சிக்குவோம் என்று யாரும் பகல் கனவு காண வேண்டாம். நீங்கள் எந்த வழியில் லஞ்சம் வாங்கினாலும் எங்களிடம் சிக்கி தான் ஆக வேண்டும். அதனால் லஞ்சம் வாங்காமல் பொதுமக்களுக்கு ஊழியம் செய்ய கற்றுக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து சார்பதிவாளர்கள் மற்றும் ஆவண எழுத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.